Navratri 2022: தமிழ்நாட்டில் நவராத்திரி இத்தனை சிறப்பு வாய்ந்ததா.? அதன் பாரம்பரியம் பற்றிய முழு விவரம் உள்ளே..
Navratri 2022: தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளிலும், கோயில்களிலும் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடுபடுகிறது. அதன் சிறப்பு தொகுப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நவராத்திரி இந்தியா முழுவதும் ஒன்பது நாள்கள் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அம்பாளை நினைத்து வழிபடும் பண்டிகை என்பதால், நவராத்திரி என்றாலே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த பண்டிகை ஒவ்வொரு மாநிலத்திலும், கலாச்சார சூழ்நிலைகளுக்கு ஏற்றவாரும், பாரம்பரிய முறைப்படியும், வெவ்வேறு பெயரில் கொண்டாடப்படுகிறது.
இது மைசூரில் தசரா என்றும், வங்காளத்தில் துர்க்கா பூஜை என்றும், தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகின்றது. அதன்படி, இந்த ஆண்டு, நவராத்திரி பண்டிகை செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி துவங்கி ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி நவராத்திரி:
ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருகிறது என்றாலும், இந்த புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஏனெனில், இந்த நவராத்திரி நாளில் ஆற்றலின் வடிவமாக, செல்வத்தின் அதிபதியாக, ஞானத்தின் உருவமாக உள்ள பெரிய சக்தியை முறையே பார்வதி, லட்சுமி மற்றும் சரஸ்வதி வடிவங்களில் வழிபடுகின்றனர். இந்த நவராத்திரிக் கொண்டாட்டம் என்பது ஒன்பது இரவுகள் மற்றும் பத்து பகல்களைக் குறிக்கும்.
கொலு வைத்து வழிபாடு:
தமிழ்நாட்டில் நவராத்திரியின் போது களிமண்ணால் செய்த பொம்மைகளை கொண்டு வீடுகளிலும், கோயில்களிலும் கொலு வைத்து வழிபாடு நடத்துகின்றனர். நவராத்திரி கொலு வைத்து நாள்தோறும் வெகு சிறப்பாக பூஜைகள் செய்துவழிபாடு நடக்கும்.
கொலுவின் முதல்படியில் இருந்து தாவரம், பூச்சிகள், விலங்குகள், மனிதர்கள், மகான்கள், தெய்வங்கள் என வரிசையாக இடம் பெறுகின்றன. கீழ்நிலையிலிருந்து உயிரானது மனிதப்பிறவியை அடைந்து மகான், தெய்வம் என்ற உயர்நிலையை அடைய வேண்டும் என்ற உண்மையை கொலு உணர்த்துகின்றது.
navratri 2022
தமிழக்தில் நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலை வேளையில் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளோர் மற்றும் உறவினர்களையும் அழைத்து கூட்டு வழிபாடு நடத்துகின்றனர். வழிபாட்டின் இறுதியில் எல்லோர்க்கும் சுண்டல் மற்றும் புளியோதரை அளிக்கப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தோல் நோய்களை தடுக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு. எனவேதான் ஒவ்வொரு நவராத்திரி நாள் கொலு வழிபாட்டின் முடிவிலும் சுண்டல் வழங்கப்படுகின்றது.
விஜய தசமி சிறப்பு:
குறிப்பாக, தென் தமிழகத்தில் தூத்துகுடி மாவட்டத்தில் உள்ள குலசேகர பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரித் திருவிழா தசரா என்னும் பெயரில் பத்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும். சங்க இலக்கியங்களில் கூட தசரா எனப்படும் விஜய தசமி நாளில் தான் எதிரி நாட்டின் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை:
நவராத்திரியின் இறுதி நாளான சரஸ்வதி பூஜை அன்று நடைபெறும் வழிபாட்டில் புத்தகங்கள், இசைக் கருவிகள் ஆகியவற்றை வைத்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்து விஜயதசமி நாளில் புத்தகங்கள், இசைக் கருவிகள் எடுக்கப்படுகின்றன.
அன்றே சரஸ்வதி பூஜை போன்று ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகின்றது. ஆயுத பூஜைக்காக எல்லோரும் அவரவர் தொழில் சம்பந்தமான கருவிகளை வைத்து வழிபாடு செய்கின்றனர்.