- Home
- Lifestyle
- 8 மணி நேரம் தூங்கியும் காலையில் சோர்வா? அலட்சியப்படுத்தக் கூடாத 5 ஆபத்தான அறிகுறிகள்!
8 மணி நேரம் தூங்கியும் காலையில் சோர்வா? அலட்சியப்படுத்தக் கூடாத 5 ஆபத்தான அறிகுறிகள்!
இரவில் 7 முதல் 9 மணி நேரம் வரை போதுமான நேரம் தூங்கினாலும் காலையில் எழும்போது ஏற்படும் உடல் சோர்வு மற்றும் புத்துணர்ச்சியின்மை சாதாரணமானது அல்ல என்று தூக்கவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

8 மணி நேரம் தூங்கியும் காலையில் சோர்வா?
தினமும் இரவில் 7 முதல் 9 மணி நேரம் வரை நன்றாகத் தூங்கியும் கூட, காலையில் எழுந்திருக்கும்போது உடல் சோர்வாகவும் புத்துணர்ச்சி இன்றியும் இருக்கிறதா? படுக்கையில் போதுமான நேரத்தைக் கழித்தால் மட்டுமே அது ஆரோக்கியமான தூக்கம் ஆகிவிடாது. உடலுக்குத் தேவையான ஆழமான, தரமான தூக்கம் கிடைக்கிறதா என்பதே முக்கியம். முழு இரவு தூங்கிய பிறகும் காலையில் ஏன் சோர்வு நீங்காமல் இருக்கிறது, எந்தெந்த எச்சரிக்கை அறிகுறிகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது குறித்து ஜெய்ப்பூரில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை, தூக்கவியல் துறை நிபுணர் டாக்டர் ஷிவானி சுவாமி விரிவாக விளக்குகிறார்.
தூக்கம் என்பது நாம் படுக்கையில் செலவிடும் மணிநேரங்களின் கணக்கு மட்டுமல்ல. அந்த நேரத்தில் உடலும் மூளையும் எந்த அளவுக்குத் தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டு மீண்டும் புத்துயிர் பெறுகின்றன என்பதுதான் முக்கியம். 7 முதல் 9 மணி நேரம் தூங்கியும் தொடர்ந்து ஒருவர் காலையில் சோர்வாக உணர்கிறார் என்றால், அவரது தூக்கத்தைக் கெடுக்கும் பின்னணி என்ன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்
8 மணி நேரம் தூங்கியும் காலையில் சோர்வு ஏற்படுவது ஏன்?
ஒருவர் 7 முதல் 9 மணி நேரம் படுத்து உறங்குவது மட்டுமே அவரது உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியைத் தந்துவிடாது. இரவில் உங்கள் தூக்கம் அடுத்தடுத்து தடைபட்டால், இயல்பான தூக்கச் சுழற்சியை உடல் முழுமையாக எட்ட முடியாமல் போகலாம். இரவில் தூக்கம் கலைந்தது உங்களுக்கே நினைவில் இல்லாமல் போகலாம். ஆனால் பகல் நேரத்தில் அதீத சோர்வு, எப்போதும் தூக்கக் கலக்கம், வேலையில் கவனம் செலுத்த முடியாமை அல்லது காலையில் தலைவலி போன்ற பிரச்சனைகள் வெளிப்படும். எனவே, காலையில் ஏற்படும் தொடர் சோர்வை வேலைப்பளு அல்லது அலைச்சல் என்று சாதாரணமாகக் கடந்துவிடாமல், சுவாசக் கோளாறுகளோ அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்னைகளோ இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல் அதன் அறிகுறிகள்
தூக்கத்தில் மூச்சுக்குழாயின் மேற்பகுதி பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அடைபடும்போது அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா (Obstructive Sleep Apnoea) என்ற பாதிப்பு ஏற்படுகிறது. அதிக சத்தத்துடன் தொடர்ந்து குறட்டை விடுவது, தூங்கும்போது சில நொடிகள் மூச்சு நின்று போவதை அருகில் இருப்பவர்கள் கவனிப்பது, மூச்சுத் திணறி அல்லது விக்கிப் போய் தூக்கம் கலைவது, பகலில் எப்போதும் அசதியாக இருப்பது ஆகியவை இதன் முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள்.
உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு இது பரவலாகக் காணப்பட்டாலும், சரியான உடல் எடையுடன் இருப்பவர்களுக்கும் இது வரக்கூடும். எனவே, தொடர் குறட்டையுடனோ அல்லது புத்துணர்ச்சியற்ற சோர்வுடனோ விழித்தால் உடனே மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
தூக்கத்தின் தரத்தைப் பாதிக்கும் பிற காரணங்கள்
சுவாசக் கோளாறுகள் மட்டுமல்லாமல் சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களும், மனநலப் பிரச்சனைகளும் கூட தூக்கத்தைக் கெடுக்கின்றன. குறிப்பிட்ட நேரமின்றி மாறுபட்ட நேரங்களில் தூங்குவது, விழிப்பது, இரவில் நீண்ட நேரம் செல்போன், லேப்டாப் போன்ற திரைகளைப் பார்ப்பது, மாலையில் டீ, காபி குடிப்பது, மது அருந்துவது போன்றவை தூக்கச் சுழற்சியைப் பாழாக்கும். மேலும் மன அழுத்தம், கவலை, மூக்கடைப்பு, ஆஸ்துமா போன்ற நுரையீரல் பாதிப்புகள் அல்லது தூங்கும்போது கால்களை ஆட்டிக்கொண்டே இருக்கும் ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் (Restless legs syndrome) போன்ற கோளாறுகளும் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்கும்.
தொடர் சோர்வு வேறு நோய்களின் அறிகுறியா?
தூக்கக் கோளாறுகளைத் தாண்டி வேறு சில மருத்துவப் பிரச்சனைகளும் இந்தத் தொடர் சோர்வுக்குக் காரணமாக அமையலாம். ரத்த சோகை (Anaemia), தைராய்டு பிரச்சனைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு, வளர்ச்சிதை மாற்றப் பிரச்சனைகள் உடலை எப்போதும் சோர்வாக வைத்திருக்கக்கூடும். எனவே முழுமையான மருத்துவப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை அல்லது தேவைப்பட்டால் ஸ்லீப் ஸ்டடி (Sleep study) மேற்கொள்வதன் மூலம் இதன் உண்மையான காரணத்தைக் கண்டறிய முடியும்.
தூக்கத்தின் தரத்தை எப்படி மேம்படுத்துவது?
தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வதையும், காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுவதையும் வழக்கமாக்கிக் கொள்வதே முதல் படி. இது உடலின் இயற்கையான தூக்க சுழற்சியைச் சீராக்கும். மாலையில் காஃபின் பயன்பாட்டைக் குறைப்பது, படுக்கைக்குச் செல்லும் முன் மொபைல் பார்ப்பதைத் தவிர்ப்பது, படுக்கையறையை அமைதியாகவும் தூங்குவதற்கு ஏற்ற சூழலிலும் வைத்திருப்பது அவசியம். போதுமான நேரம் தூங்கிய பிறகும் கூட காலையில் சோர்வு நீடிக்கிறது என்றாலோ, சத்தமான குறட்டை, மூச்சுத் திணறல் இருந்தாலோ அதைச் சாதாரணமாக எண்ணாமல் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே பாதுகாப்பானது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

