- Home
- Lifestyle
- Parenting Tips : பெற்றோரே! ஒரு அடி கூட அடிக்காம குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுத் தரனுமா? ஈஸியான '4' டிப்ஸ்
Parenting Tips : பெற்றோரே! ஒரு அடி கூட அடிக்காம குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுத் தரனுமா? ஈஸியான '4' டிப்ஸ்
குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க சிறந்த 3 வழிகளை இங்கு காணலாம்.

Teach Your Kids Good Habits
குழந்தைகளின் பழக்கங்கள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருப்பதால் வருகின்றன. சில பழக்கங்கள் நல்லதாகவும், சிலவை கெட்டதாகவும் இருக்கலாம். குழந்தைகள் யாருடன் பழகுகிறார்களோ அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் உங்களுடைய குழந்தையை நல்வழிபடுத்த நினைத்தால் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதில் முதலாவது நீங்கள் நல்ல பழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும். அடித்து, திட்டி குழந்தைகளுக்கு ஒவ்வொன்றையும் கற்றுக் கொடுப்பதை விட எளிமையாக எப்படி அவர்களுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்கலாம் என இங்கு காண்போம்.
நீங்க பாஸ் இல்ல! ப்ரெண்ட்ட்ட்!!!
உங்களுடைய குழந்தையிடம் நீங்கள் நண்பரைப் போல பழக வேண்டும். அதற்காக அவர்களை கண்டிக்கவே கூடாது என சொல்லவில்லை. அவசியமான நேரங்களில் கொஞ்சம் கண்டிப்பும் தேவை. ஆனால் ஒரு கடுமையான முதலாளியை போல குழந்தைகளை நடத்துவது தவறு. உங்களுடைய நல்ல பழக்கங்களைப் பார்த்து குழந்தைகள் அவர்களாகவே அதனை கற்றுக் கொள்வார்கள். உதாரணத்திற்கு, நீங்கள் உடற்பயிற்சி செய்யும் நபராக இருந்தால் குழந்தைகளையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். நாளடைவில் அவர்கள் உங்களை அழைக்க ஆரம்பித்துவிடுவார்கள். பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களையும் அருகில் அமர வையுங்கள். கொஞ்ச நாட்களில் அவர்களே பிரார்த்தனை செய்ய ஆரம்பிப்பார்கள்.
நேரம் தவறாமை!
ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். இந்தப் பழக்கத்தை குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே ஏற்படுத்துவது முக்கியம். பள்ளி விட்டு வந்த பின் ஆடைகளை மாற்றிவிட்டு விளையாட வேண்டும். படிக்க தனிநேரம், பொழுதுபோக்கிற்கு தனிநேரம் என பழக்க வேண்டும். செல்போன் பார்க்க குறிப்பிட்ட நேரம் என்பதை புரிய வைத்து அதை செயல்படுத்த வேண்டும். செல்போன் ரொம்ப நேரம் பார்த்துவிட்டு ஹோம்வொர்க் செய்யாமல் தூங்குவதை அனுமதிக்காதீர்கள். ஹோம்வொர்ல் செய்தால் அரை மணிநேரம் செல்போன் அல்லது டிவி பார்க்கலாம். இல்லையென்றால் கிடையாது என ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி அதை பின்பற்ற பழக்குங்கள்.
மனதோடு விளையாடு
குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களையும், கெட்ட விஷயங்களையும் பிரித்தறிய தெரிகிறதா? என்பதை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். இதை தெரிந்து கொள்ள அவர்களிடம் பேசி பார்க்க வேண்டும். உதாரணமாக, ஏதாவது கதைகளை சொல்லி அதில் இருந்து கேள்விகள் கேட்கலாம். அவர்களுடைய கருத்துகள் மூலம் எதை நல்லது என்றும், எதை கெட்டது என்றும் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களை நல்வழிப்படுத்த முடியும்.
ஆரோக்கியத்திற்கான புரிதல்
குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது பெற்றோரின் கடமையாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அடிப்படையாக உணவுப் பழக்கம் விளங்குகிறது. அவர்கள் எதை ஆரோக்கியமான உணவு என நினைக்கிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். துரிய உணவுகள், பதப்படுத்தப்பட்ட பிஸ்கெட், மிட்டாய்கள் ஆரோக்கியமில்லை என்பதை கண்டிப்புடன் சொல்லி புரிய வைக்க வேண்டும். நாளடைவில் அவர்களே அதைவிட்டுவிடுவார்கள்.
இங்கு சொல்லப்பட்டவை சில உதாரணங்கள்தான். இதேப் போல அவர்களுடன் பேசுவதன் மூலம் சிறுமாற்றங்களை செய்யலாம். குறிப்பாக நீங்கள் நல்ல உணவுப் பழக்கங்களை கொண்டிருந்தால் அவர்களும் பின்பற்றுவார்கள். நீங்கள் நல்லதை செய்வதன் மூலம் குழந்தைகளை நல்ல பழக்கங்களுடன் வளர்க்க முடியும்.