பயங்கரமா அடிபிடித்த பாத்திரம் நொடியில் பளபளக்கணுமா? கஷ்டபடாம கறையை போக்க டிப்ஸ்!
பாத்திரம் அடிபிடிக்கவும், கறையாகவும் காரணங்கள் ஏராளம் உண்டு. அதனை எளிமையாக எப்படி பளப்பளக்க செய்யலாம் என்பதை இங்கு காண்போம்.
சமையல் செய்யும்போது அடிப்பிடிக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கக் கூடியது. அந்தக் கறைகளை எளிதில் நீக்க சில வழிகள் உள்ளன. காலையில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும்போது ஒரு சில சமயம் சமயலைறையில் ஏதேனும் குளறுபடிகள் நடப்பது வழக்கம். தயிர் தாளிக்க வைத்துவிட்டு மறந்தபடியே காய்கறிகளை நறுக்கத் தொடங்கியிருப்போம். சில நேரம் அடுப்பை அணைத்து விட்ட நினைவில் அடுத்த வேலைக்கு தாவியிருப்போம். இங்கு வாணலி கருகி கொண்டிருக்கும். இது தவிர புதிய சமையல் ரெசிபிகளை பழகும் கத்துக்குட்டிகள் பாத்திரங்களை மானாவாரியாக பயன்படுத்தி கறையாக்கிவிடுவார்கள். பாத்திரம் அடிபிடிக்கவும், கறையாகவும் காரணங்கள் ஏராளம் உண்டு. அதனை எளிமையாக எப்படி பளப்பளக்க செய்யலாம் என்பதை இங்கு காண்போம்.
எளிமையான தீர்வு
காய்கறிகளை பொரிக்கும்போது ஏற்படும் கறைகளை போக்க அந்த வாணலியில் வெஜிடபிள் ஆயில் கொஞ்சமாக ஊற்றிவிடுங்கள். அதனை நல்லா கழுவினால் அங்குள்ள கறைகள் அதுவாகவே நீங்கும். பால் பொங்குவதும், அடிபிடித்து போவதும் இயல்பாக நடக்கும் விஷயம் தான். அந்த கறையை தயிரின் உதவியால் நீக்கலாம். ஆனாலும் இது மெதுவாகத்தான் போகும்.
கூல்டிரிங்ஸ் குடிக்க மட்டுமல்ல!
குளூரட்டப்பட்ட கார்பனேட் பானங்களை பாத்திரங்களில் உள்ள கறைகளை போக்க பயன்படுத்தலாம். பெப்சி, செவன் அப் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை கருகிய பாத்திரங்களில் ஊற்றி கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்த பிறகு பாத்திரத்தை இறக்கி வைத்து ஆறவிடுங்கள். பிரஷ் அல்லது டிஷ் சோப்பு கொண்டு அழுத்தி தேய்த்தால் கறைகள் நீங்கும். அலுமினிய பாத்திரங்களில் எளிதில் வேலை செய்யும்.
பேக்கிங் சோடா போதும்!
பேக்கிங்க் சோடா, எலுமிச்சை, போரக்ஸ் பொடி, லிக்விட் டிஷ் வாஷ் ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள். மற்றொரு பாத்திரத்தில், அடிபிடித்த வாணலிக்கு ஏற்ற அளவு நீரை நிரப்பி அடுப்பில் வையுங்கள். நீங்கள் சேர்த்த நீருக்கு ஏற்ற மாதிரி மேலே சொன்ன பொருட்களை சேருங்கள். நன்றாக கொதிக்கட்டும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அடிபிடித்த பாத்திரத்தில் நீங்கள் தயாரித்த தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள். அது ஒரு அரை மணி நேரம் ஊறட்டும். அதன் பிறகு வழக்கம் போல பிரஷோ, கம்பி நாரோ கொண்டு தேய்க்க கறைகள் நீங்கும்.
வினிகர் செய்யும் மாயம்!
பேக்கிங் சோடா, வினிகர், லிக்விட் டிஷ் வாஷ் ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள். முதலில் வினிகரையும், லிக்விடையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் பேக்கிங் சோடாவும் போடுங்கள். தயார் செய்த கறை நீக்கும் லிக்விடை அடிபிடித்த வாணலியை சுற்றி தேயுங்கள். அப்படியே 20 நிமிடங்கள் ஊறவிட்டு, வழக்கம் போல பிரஷோ, கம்பி நாரோ கொண்டு தேய்க்க கறைகள் நீங்கும்.