- Home
- Lifestyle
- Smart TV Maintenance : மறந்து கூட இந்த பொருட்களை கொண்டு ஸ்மார்ட் டிவி திரைகளை சுத்தம் பண்ணிடாதீங்க.!
Smart TV Maintenance : மறந்து கூட இந்த பொருட்களை கொண்டு ஸ்மார்ட் டிவி திரைகளை சுத்தம் பண்ணிடாதீங்க.!
சுத்தமான தெளிவான காட்சிகளுக்கு டிவி ஸ்கிரீனை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். டிவி ஸ்கிரீனை சுத்தம் செய்யும் சில முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Avoid these mistakes when cleaning smart tv screens
தற்போது பலரது வீடுகளிலும் ஸ்மார்ட் டிவிகள் உள்ளன. இந்த டிவிகள் LED, OLED, QLED போன்ற மென்மையான திரைகளை கொண்டுள்ளன. இது ஆன்டி கிளாரிங் மற்றும் ஆன்டி ரிஃப்ளக்சன் கோட்டிங்கை கொண்டுள்ளன. அவற்றை தவறான முறையில் சுத்தம் செய்யும் பொழுது அந்த ஸ்கிரீனில் கீறல்கள், மங்கலான காட்சிகள் மற்றும் நிரந்தர சேதங்கள் ஏற்படலாம். எனவே டிவி ஸ்கிரீனை சுத்தமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சில தவறுகளை செய்யக்கூடாது. சில பொருட்களைக் கொண்டு அல்லது தவறான தயாரிப்புகளை பயன்படுத்தி சுத்தம் செய்தால் டிவி ஸ்க்ரீன் நிரந்தரமாக சேதமடைந்து விடும். அந்தப் பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆல்கஹால் கொண்ட க்ளீனர்களை பயன்படுத்தக் கூடாது
ஸ்மார்ட் டிவிகளின் திரைகள் மிகவும் உணர் திறன் கொண்டவை. எனவே அதிகமாக அழுத்தி துடைக்க கூடாது. பேப்பர் டவல் மற்றும் டிஷ்யூக்கள் போன்றவற்றை வைத்து ஸ்கிரீனை துடைக்க கூடாது் டிஷ்யூக்களில் இருந்து வரும் இழைகள் ஸ்கிரீனில் கீறல்களை ஏற்படுத்தலாம். எனவே ஸ்கிரீனில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளை நீக்குவதற்கு மைக்ரோ பைபர் துணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கார் கண்ணாடிகள் மற்றும் ஜன்னல் கதவுகளை துடைக்க பயன்படுத்தும் கண்ணாடி கிளீனரை கொண்டு டிவி திரைகளை சுத்தம் செய்யக்கூடாது. இந்த கிளீனர்களில் அம்மோனியா அல்லது ஆல்கஹால் போன்ற ரசாயனங்கள் உள்ளன. அவை திரையில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி, நிற மாற்றம், மங்கலான காட்சிகள் அல்லது சேதத்தை ஏற்படுத்தலாம்.
கிளீனர்கள் மற்றும் ஸ்பாஞ்சுகள் பயன்படுத்தக் கூடாது
டிவி திரைகளை சுத்தப்படுத்துவதற்காக சிலவகை கிளீனர்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. இந்த கிளீனர்களில் ஆல்கஹால்கள் கலந்திருக்கலாம். இது ஆன்டி கிளார்க் கோட்டிங்கை படிப்படியாக சேதப்படுத்தும். OLED மற்றும் QLED போன்ற திரைகளில் இந்த ஆல்கஹால் அடிப்படையிலான கிளீனர்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி ஸ்கிரீனை நிரந்தரமாக செயலிழக்கச் செய்யலாம். ஸ்கிரீனை துடைப்பதற்கு சிலர் ஸ்பாஞ்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவார்கள். ஆனால் இதுவும் தவறான முறையாகும். கரடு முரடாக இருக்கும் ஸ்பாஞ்சுகள் ஸ்கிரீனில் கீறல்களை ஏற்படுத்தும். மேலும் இதில் இருக்கும் சிறிய துகள்கள் திரையை கடுமையாக பாதிக்கும். எனவே ஸ்பாஞ்ச் கொண்டு துடைப்பதையும் தவிர்த்து விட வேண்டும்.
ஈரமான டிஷ்யூ பேப்பர்கள், பேபி வைப்ஸ் வேண்டாம்
சிலர் ஸ்ப்ரே பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி திரையில் ஸ்பிரே செய்து அதன் பின்னர் துடைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பர். இது மிகவும் தவறான முறையாகும் எந்த ஒரு திரவ பொருளும் திரையின் விளிம்புகள் வழியாக உள்ளே சென்று திரை அல்லது உள்ளே இருக்கும் எலக்ட்ரானிக் சாதனங்களை வெகுவாக பாதிக்கும். சில சமயங்களில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு பாதிப்புகள் அதிகமாகலாம். சிலர் நெயில் பாலிஷ் ரிமூவர் அல்லது அசிட்டோன் கொண்ட கிளீனர்கள் மூலமாக திரையை சுத்தம் செய்வர். இது திரையின் பாதுகாப்பு அடுக்கில் சேதத்தை ஏற்படுத்தலாம் அதேபோல் ஈரமான டிஷ்யூ பேப்பர்கள், பேபி வைப்ஸ் ஆகியவை மென்மையாகத் தோன்றலாம். இதைக் கொண்டு திரையை துடைத்தால் திரையில் உள்ள கோட்டிங்கில் சேதம் ஏற்படும்.
தெளிவான காட்சிகளுக்கு திரையை சுத்தம் செய்ய வேண்டும்
அதேபோல் கிளீனிங் பவுடர்கள், டிடர்ஜென்ட், பேக்கிங் சோடா உள்ளிட்டவையும் திரைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தலாம். இவை திரையில் கீறல்களை ஏற்படுத்தி படத்தின் தெளிவை நிரந்தரமாக கெடுக்கக்கூடும். எனவே இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். ஸ்மார்ட் டிவியின் திரையை சுத்தம் செய்வது என்பது முக்கியம். கைரேகைகள், கறைகள், தூசி ஆகியவை படர்ந்து திரையின் தெளிவை குறைத்து, பார்க்கும் அனுபவத்தையும் கெடுக்கும். ஆனால் அதே சமயம் தவறான முறையில் சுத்தம் செய்வது திரைக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தி செலவுக்கு வழி வகுக்கலாம். எனவே மேற்கூறப்பட்ட தவறுகளை செய்யக்கூடாது.
ஸ்மார்ட் டிவி திரையை சுத்தம் செய்வது எப்படி?
டிவியை துடைக்க விரும்புவர்கள் முதலில் டிவியை அணைத்துவிட்டு, மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். வறண்ட சுத்தமான மைக்ரோ பைபர் துணியை எடுத்து திரையில் துடைக்க வேண்டும். கைரேகைகள் அல்லது கறைகள் இருந்தால் சிறிது டிஸ்டில்டு வாட்டர் அல்லது பிரத்யேக ஸ்கிரீன் கிளீனரை தெளித்து மெதுவாக வட்டமான திசையில் துடைக்க வேண்டும். பின்னர் வறண்ட சுத்தமான மைக்ரோ பைபர் துணியால் மீதமுள்ள ஈரப்பதத்தை மெதுவாக துடைத்து, திரையை உலர விட வேண்டும். திரை நன்றாக உலர்ந்த பின்பு மீண்டும் மின் இணைப்பை கொடுக்கலாம். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் டிவியின் திரையை பாதுகாப்பாகவும், திறமையாகவும் சுத்தம் செய்து அதன் ஆயுளை நீட்டிக்கலாம்.