Trees : வீட்டில் வளர்க்கவே கூடாத மரங்கள்.. மீறி வளர்த்தால் கஷ்டங்கள் வருமாம்.!
மரம் நட்டு வளர்ப்பது என்பது நமக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே நன்மைகளை தரும். ஆனால் வீட்டில் சில மரங்களை வளர்ப்பது நல்லதல்ல என்று வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மரம் வளர்ப்பு பற்றி அகத்தியர் கூறுவது என்ன?
அகத்தியரின் ‘புனைச்சுருட்டு’ நூலில் பருத்தி, அகத்தி, பனை, நாவல், அத்தி, எருக்கு, வெள்ளெருக்கு, புளியமரம், கருவேலம், முருங்கை, கல்யாண முருங்கை, கள்ளி, கரு ஊமத்தை, வில்வம், இலவம், ருத்ராட்சம், உதிரவேங்கை ஆகிய 17 வகையான மரங்களை வீட்டில் வைக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. புளிய மரம் எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் தன்மை கொண்டது. எனவே, இதனை வீட்டில் வளர்க்கக் கூடாது. எதிர்மறை சக்திகளால் வீட்டில் துன்பமும், வறுமையும் பெருகும். எனவே வீடுகளில் புளிய மரத்தை நடுவதை தவிர்த்து விடுங்கள். புளியமரம் சுற்றி உள்ள பகுதிகளில் வீடுகளையும் வாங்க வேண்டாம்.
அரச மரம் மற்றும் வில்வ மரம்
அரச மரம் மிகவும் புனிதமானது. ஆனால், அதை வீட்டில் வளர்ப்பது நல்லதல்ல. ஏனெனில், அது வீட்டில் உள்ளவர்களின் மன அமைதியைக் கெடுக்கும். மேலும் பண விரயம் மற்றும் பண பிரச்சனை ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதன் வேர் சுவர்களில் பரவினால் வீடு சேதமடையும். வில்வ மரம் லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறது. ஆனால், அதை வீட்டில் வளர்ப்பது நல்லது கிடையாது. ஏனெனில், அது வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். வில்வமரம் கோயில்களில் தல விருட்சமாக மட்டுமே இருக்க வேண்டும். இதை வீடுகளில் நட்டு வளர்ப்பதை தவிருங்கள்.
நாவல் மரம் மற்றும் அத்தி மரம்
நாவல் மரத்தை வீட்டில் வளர்க்க வேண்டாம் என கூறியதற்கு காரணம் அது மிகவும் குளிர்ச்சியான தன்மை கொண்ட மரம். இது நச்சுப் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. இந்த பூச்சிகள் வீட்டிற்குள் வரும் என்பதால் இந்த மரத்தை வீட்டைச் சுற்றி வளர்க்க கூடாது என முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. அத்திப்பழம் பறவைகளுக்கு மிகவும் பிடித்த பழம். இந்த பழத்தை சுவைப்பதற்காக வௌவால்கள் அத்தி மரத்தை தேடி வரும். வௌவால்களால் பல நோய்கள் ஏற்படும் என்பதால் அத்தி மரத்தையும் வீட்டைச் சுற்றி வளர்க்கக்கூடாது.
கறிவேப்பிலை மற்றும் பிற மரங்கள்
வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் இருந்தால் கறிவேப்பிலை மரத்தை வளர்க்கலாம். அப்படி இல்லையேல் இந்த மரத்தை வளர்க்கக்கூடாது. மீறி வளர்த்தால் பிள்ளைகள் நோய்வாய்ப்படும், வாழ்க்கையில் கஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த மரங்களைத் தவிர, பலா, பனை மரம், இலந்தை மரம் போன்றவற்றையும், கற்றாழை, சப்பாத்திக்கள்ளி போன்ற முள் உள்ள செடிகளையும் வீட்டில் வளர்க்கக் கூடாது. இந்த வகை மரங்கள் மற்றும் செடிகள் வீட்டில் துரதிஷ்டத்தையும் கஷ்டத்தையும் தருமென கூறப்படுகிறது.
வளர்க்க வேண்டிய மரங்கள்
வீட்டில் மரம் வளர்க்க வேண்டும் என்று விரும்பினால், மாமரம், தென்னை மரம், வாழை மரம் போன்ற மரங்களை வளர்க்கலாம். எப்போதும் மணம் வீசும் சாமந்தி, ரோஜா, சூரியகாந்தி செடிகளை வளர்க்கலாம். கொய்யா மரங்களை வளர்க்கலாம்.