Health: வாவ்... பாலை விட அதிக கால்சியம் இந்த உணவுகளில் உள்ளது! உங்களுக்கு தெரியுமா?
கால்சியம் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது உடல் நலனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் வீட்டில் குழந்தைகள் பலர் பால் என்றாலே பயந்து ஓடி விடுவார்கள். பெரியவர்களுக்கு கூட பால் என்றால் தொடர்ந்து குடிப்பதில் சலிப்பு தட்டும். இப்படி பட்ட நேரங்களில், பாலை விட அதிக கால்சியம் கொண்ட இந்த உணவுகளை அவர்களுக்கு கொடுக்கலாம்.
தினசரி உங்களுடைய கால்சியம் அளவைப் பெற... நீங்கள் ஒரு கிளாஸ் பாலை விரும்பாமல் குடித்துக்கொண்டிருந்தால், அதற்குப் பதிலாக இந்த சத்தான ஆரோக்கியமான உணவை கொஞ்சம் முயற்சித்து பாருங்களேன்..
கொண்டைக்கடலை: (Chickpeas)
ஒன்றரை கப் கொண்டைக்கடலையில் 315 mg கால்சியம் மற்றும் நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது. இதை அவித்தோ, அல்லது உங்களது உணவுக்கு ஏற்றாப்போல் குருமா போன்ற செய்து சாப்பிடலாம். முளைகட்டிய கொண்டைக்கடலையை, காலையில் சாப்பிடுவதில் அதிக பலன் தரும்.
கீரைகள்: (Greens)
பச்சை கீரைகளில் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இரண்டு கப் கீரையில் சுமார் 394 mg கால்சியம் உள்ளது. உங்கள் தினசரி உணவில் அவற்றைப் பயன்படுத்துவதாலும், சாலட், சப்பாத்தி போன்றவற்றியில் கூட கீரையை பொடியாக நடிக்கி சேர்த்துக்கொள்வதால் சுவை கூடுவது மட்டும் இன்றி உங்கள் உடலும் ஆரோக்கியம் பெரும்.
பாதாம்: (Almond)
பாதாம் மூளைக்கு பலம் சேர்க்க வல்லது. அதே நேரத்தில், அவற்றில் கால்சியம் அதிகம் நிரம்பியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? 3/4 கப் பாதாம் உங்களுக்கு சுமார் 320 mg கால்சியத்தை கொடுக்கும். பாதாமில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. எனவே தினமும் பாதாம் எடுத்து கொள்வது மிகவும் சிறந்தது.
மீன்: (Fish)
கடல் உணவு பிரியர்களே, இது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி தான். மீன்களில் அதிக அளவு கால்சியம் நிறைந்துள்ளது. அதிலும் பொறித்த, வறுத்த மீன்களை தவிர்த்து... குழம்பில் போட்டு வேகவைத்த மீன்களை, 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தருவது ருசியான உணவாக மட்டும் அல்ல சத்தான உணவாகவும் அமையும்.
உலர்ந்த அத்திப்பழங்கள்: (Dried Fig)
உலர் அத்திப்பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவுடன் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. ஒன்றரை கப் உலர்ந்த அத்திப்பழத்தில் சுமார் 320 mg கால்சியம் சராசரியாக இருக்கும். அதே போல் அத்திப்பழத்தில் கலோரிகளும் அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் காலை உணவு கிண்ணத்தில் சிறிதளவு சேர்க்கலாம் அல்லது உங்கள் எனெர்ஜி ட்ரிங்க்சில் சிறிதளவு நறுக்கி சேர்த்துக்கொள்வது உங்கள் உணவை சத்தாக மாற்றுவது மட்டும் இன்றி ருசியாகவும் இருக்கும்.
சியா விதைகள்: (chia Seeds)
100 கிராம் சியா விதைகளில் 631 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. சுமார் மூன்று தேக்கரண்டி சியா விதைகளில் ஒரு கிளாஸ் பாலை விட அதிக கால்சியம் இருக்கும். எனவே இதையும் உங்களது உணவில் தவறாமல் சேர்த்து கொள்ளுங்கள்.