- Home
- Lifestyle
- Parenting Tips : குழந்தைகளை 'ப்ளே ஸ்கூல்' கண்டிப்பா சேர்க்கனுமா? பெற்றோர் புரிஞ்சுக்க வேண்டிய விஷயம்
Parenting Tips : குழந்தைகளை 'ப்ளே ஸ்கூல்' கண்டிப்பா சேர்க்கனுமா? பெற்றோர் புரிஞ்சுக்க வேண்டிய விஷயம்
குட்டிக் குழந்தைகளை ப்ளே ஸ்கூல் அனுப்புவது என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இங்கு காணலாம்.

குழந்தைகளை 3 வயதிலேயே பள்ளி சார்ந்த நடவடிக்கைகளில் பல பெற்றோர் ஈடுபடுத்தி வருகின்றனர். ப்ளே ஸ்கூல் என அழைக்கப்படும் விளையாட்டுப் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவது விருப்பத்திற்குரியவைதான். அது கட்டாயத் தேவை இல்லை. ஆனால் சமூக அழுத்தம் காரணமாக பல பெற்றோர் தங்கள் குழந்தையைச் சேர்த்துவிடுகிறார்கள். நல்ல பெற்றோர் என்றால் குழந்தைகளை ப்ளே ஸ்கூல் அனுப்புவார்கள் என்ற பிம்பமும் உள்ளது. இது உண்மையில் மதிப்புள்ளதா? என்பதை இங்கு காணலாம்.
பல பெற்றோர் குழந்தைகளை அங்கன்வாடி, ப்ளே ஸ்கூல் ஆகியவற்றிற்கு அனுப்ப காரணம் குழந்தைகள் கற்றுக்கொள்ளவும், வளரவும் தான். ஆனால் அதே நேரத்தில் பெற்றோர் தங்களுடைய வழக்கமான வேலைகளை கவனிக்கிறார்கள். இந்த மாதிரி பள்ளிகள் சரியாகச் செயல்பட்டால் குழந்தைகளை அனுப்ப தகுதியானவைதான். பொதுவாக ப்ளே ஸ்கூல் குழந்தைகளை தேர்வுகளுக்குத் தயார்படுத்த அல்ல; பள்ளி வாழ்க்கைக்கு அடித்தளம்தான். ஒருவேளை குழந்தைகளை அங்கு நன்கு கவனித்து கொள்ளாவிட்டால் அதுவும் வீண்.
குழந்தைகளை கவனித்துக் கொள்ள வீட்டில் தாத்தா, பாட்டி அல்லது உதவியாளர்கள் இருக்க வேண்டிய தேவையிருக்கிறது. இதுதான் குழந்தைகளுக்கு பாசத்தையும், அரவணைப்பையும் வழங்குகிறது. அவர்களை பாதுகாப்பாக உணரச் செய்கிறது. ஆனால் ப்ளே ஸ்கூல் இவற்றை குழந்தைகளுக்கு முற்றிலும் கொடுப்பதில்லை. இந்த ஆரோக்கியமான இடைவெளிகளை அவை குறைத்து விடுகின்றன.
நல்ல ப்ளே ஸ்கூல் குழந்தைகளுக்கு கற்றலை காட்டிலும் அதிகமான அனுபவங்களை வழங்கும். குழந்தையின் குணநலன்கள், திறன்களை வடிவமைக்கிறது. குழந்தைகளுக்கு உணர்ச்சிகளை கையாளுதல், சமூகத் தொடர்பு, அறிவாற்றல், மோட்டார் திறன்கள் ஆகியவை மேம்பாடு அடைகின்றன. குழந்தைகள் சுதந்திரத்தைக் கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும். நண்பர்களை உருவாக்குதல், மோதல்களைப் பகிர்தல் போன்றவை அங்குதான் சீக்கிரமே தொடங்குகின்றன. பள்ளிக்கு செல்ல தயார் ஆகிறார்கள். அடிப்படை அறிவுடன் பள்ளிக்கு செல்கின்றனர்.
கண்டிப்பாக குழந்தையை 3 வயதில் ப்ளே ஸ்கூல் அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லை. பல பள்ளிகளில் ப்ளே ஸ்கூலுக்கே பல ஆயிரங்கள் தேவைப்படும். சில குழந்தைகளுக்கு அது எதிர்மறை அனுபவமாகிவிடும். குழந்தைகளுக்கான நேரம் முக்கியம். உண்மையில் உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயாராக இருந்தால், அந்த அனுபவத்தை அவர்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டால் மூன்று வயதில் மழலையர் பள்ளி சரியான தேர்வு. ஆனால் அவர்களுக்கு உண்மையான தேவை இல்லை என்றால் பெற்றோர் அவர்களை தாமதமாக பள்ளிக்கு அனுப்பலாம். சமூக அழுத்தம் காரணமாக பள்ளியில் சேர்க்க வேண்டாம். குழந்தையின் முதல் மூன்று ஆண்டுகள் வாழ்வின் சிறந்த அடித்தளம். அதை வீணடிக்க வேண்டாம்.