டோக்கன் கொடுத்து சடலங்களை எரிக்கும் கொடூரம்... கொரோனாவால் அரங்கேறும் உச்சகட்ட அவலம்.. மனதை உருக்கும் போட்டோஸ்!
நாளுக்கு நாள் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எரிக்க தேவையான கட்டைகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்தியாவில் தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 2 ஆயிரத்து 812 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் மடியும் மக்களை எரியூட்ட கூட முடியாத அளவிற்கு அடுத்தடுத்து சடலங்கள் குவிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ஸிஜன் தட்டுபாடு காரணமாக டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை ஒட்டுமொத்த தலைநகரையும் சூறையாடி வருகிறது.
இந்நிலையில் இறந்தவர்களை எரியூட்ட கூட இடம் கிடைக்காமலும், சிதைக்கு தீ வைக்க கட்டைகள் கிடைக்காமலும் உயிரிழந்த உறவுகளின் சடலத்தோடு ரத்த கண்ணீர் வடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
டெல்லியை பொறுத்தவரை 24 மணி நேரத்தில் 289 சடலங்களை மட்டுமே எரியூட்ட முடியும் என்ற நிலை கூட தற்போது 400 சடலங்களாக மாநகராட்சி நிர்வாகத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. நிறைய மின் மயானங்கள் தொடர்ந்து இயங்குவதால் அதில் உள்ள இரும்பு கம்பிகள் உருகிப்போகும் அதிர்ச்சி சம்பவங்கள் கூட அரங்கேறின.
நாளுக்கு நாள் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எரிக்க தேவையான கட்டைகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் எரியூட்டுவதற்கான இடம் கிடைக்கவும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டி உள்ளதால், சடலங்களை எரிக்க டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது.
சரி சடலத்தை நம் வழக்கப்படி புதைத்துக் கொள்ளலாம் என நினைப்பவர்களும், கொரோனா நோயாளிகளின் உடலை புதைக்க குழி தோண்டுபவர்கள் கிடைக்காததால் கட்டாயம் எரியூட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படியான கொடூர சம்பவங்களால் தலைநகரில் வசிக்கும் மக்கள் கொரோனாவால் சொல்ல முடியாத அளவிற்கு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.