Summer 2023: ஏசி வாங்கப் போறீங்களா? இந்த விஷயங்களை மனசுல வெச்சுக்கோங்க!
கோடை காலம் வேகமாக நெருங்கி வருவதால், ஏசிகளின் தேவையும் அதிகரிக்கும். பலருக்கும் வெயில் வாட்டி வதைக்கத் தொடங்குவதற்குள் ஏசி வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சுட்டெரிக்கும் வெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன் ஏசியின் குளிர் காற்றில் இளைப்பாறியபடி குளிர்பானங்களைப் பருகலாம். அந்த வகையில் ஏசி வாங்கும் திட்டத்துடன் இருப்பவர்கள் நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள் இதோ.
பட்ஜெட் எவ்வளவு?
உங்கள் ஏசிக்கான பட்ஜெட்டை நீங்கள் தீர்மானிக்க வேண்டியது முதல் விஷயம். உங்கள் பட்ஜெட் வரம்பிற்குள் வாங்கும்போது தேர்வு செய்வது மிகவும் எளிதாகிவிடும். இப்போது சாதாரண ஏசி சுமார் ரூ.30,000 விலைக்குக் கிடைக்கிறது.
பணம் செலுத்தும் முறை
உங்கள் ஏசியை வாங்குவதற்கு எந்த முறையில் பணம் செலுத்தலாம் என்பதையும் முடிவு செய்துகொள்வது அவசியம். கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும்போது சிறப்புச் சலுகைகள் கிடைக்கக்கூடும். UPI மூலம் பணம் செலுத்தினாலும் கேஷ்பேக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை உடனடியாக பெரிய தொகையை செலவழிக்க விரும்பவில்லை என்றால், தவணை முறையில் வாங்கும் வாய்ப்பு உள்ளது. பல கடைகளில் வட்டி இல்லாத தவணை வசதி இருக்கும். 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை தவணை முறையில் பணம் செலுத்தலாம்.
விலையைச் சரிபார்க்கவும்
கடைகளில் போய் பார்த்துவிட்டு அப்படியே வாங்குவதைவிட விலையை பல ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களில் பார்வையிட்டு ஒப்பிடலாம்.
சின்ன அறையா? பெரிய அறையா?
பெரிய அறையில் 1 டன் ஏசி பயனுள்ளதாக இருக்காது. சிறிய அறை என்றால் 2 டன் ஏசி இருந்தால் தாங்க முடியாத அளவுக்கு குளிர்ச்சியாக இருக்கும். பொதுவாக, 100 அல்லது 120 சதுர அடி அறைக்கு 1 டன் ஏசி போதுமானது. பெரிய அறையாக இருந்தால், 1.5 அல்லது 2 டன் ஏசி வாங்கலாம்.
வீடு எந்தத் தளத்தில் உள்ளது?
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறீர்கள் என்றால், ஏசி வாங்கும்போது உங்கள் வீட்டு எத்தனையாவது தளத்தில் உள்ளது என்பதும் முக்கியமானது. கட்டிடத்தின் கடைசி தளத்தில் இருந்தால், அதிக வெப்பமாக இருக்கும். அப்படியானல் உங்களுக்கு பெரிய ஏசி தேவைப்படும்.
விண்டோ ஏசியா? ஸ்பிளிட் ஏசியா?
ஸ்பிளிட் மற்றும் விண்டோ ஏசிகளுக்கு இடையே குளிரூட்டலில் அதிக வித்தியாசம் இருக்காது. இருப்பினும், ஸ்பிலிட் ஏசிகளுடன் ஒப்பிடும்போது ஜன்னல் ஏசிகள் சற்று மலிவானதாக இருக்கும். அதேசமயம் அதைப் பொருத்த வசதியான ஜன்னல் ஒன்று இருக்கவேண்டும். ஆனால், ஸ்பிளிட் ஏசியை எங்கும் பொருத்த முடியும். விண்டோ ஏசிகள் மின்சாரத்தைச் சேமிக்கும். ஸ்பிளிட் ஏசிகள் அதிக அளவு குளிர்ந்த காற்றை வெளியேற்றும்போதும் சத்தம் ஏற்படாது. வேகமாகவும் குளிர்ச்சி கொடுக்கும்.
காயில் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
நிறைய பேர் இதை கவனிப்பதில்லை. ஏசியில் பயன்படுத்தப்படும் காயில் எனப்படும் கம்பிச்சுருள் எந்த வகையானது என்று தெரியவேண்டும். செப்புச் சுருள் பராமரிப்பதற்கும், பழுதுபார்ப்பதற்கும் எளிதானது, வேகமாகவும் குளிர்ச்சி அடையும். அலுமினியச் சுருளைவிட நீண்ட ஆயுளையும் கொண்டது.
ஸ்டார் ரேட்டிங்
ஸ்டார் ரேட்டிங்கில் எத்தனை ஸ்டார் வழங்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்பதும் முக்கியமானது. 5 ஸ்டார் குறியீடு உள்ள ஏசி அதிக அளவில் மின்சாரத்தைச் சேமிக்கும். ஸ்டார் ரேட்டிங் குறையக் குறைய விலையும் குறையும். ஆனால், அதன் மின்சார சேமிப்புத் திறன் குறைவாக இருக்கும். அதனால் நீண்ட காலத்திற்கு செலவை ஏற்படுத்தும்.
வாடிக்கையாளர் சேவை
ஏசியில் செலவு செய்வது ஒரு முறையுடன் முடிந்துவிடுவது அல்ல. ஒவ்வொரு மாதமும் அதை சர்வீஸ் செய்யவேண்டும், அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும். எனவே வாங்கும் பிராண்டில் வாடிக்கையாளர் சேவை எப்படி இருக்கிறது. உங்கள் பகுதியில் விரைவான சர்வீஸ் வசதி உள்ளதா என்று பார்ப்பது அவசியம். இதுபற்றி ஏசி விற்பனை செய்யும் டீலரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
வித்தைகளுக்கு ஏமாற வேண்டாம்
மார்க்கெட்டிங் வித்தைகளில் விழுந்துவிடாமல் இருக்கவேண்டும். வைஃபை மூலம் ஏசியைக் கட்டுப்படுத்துவது போன்ற அம்சங்கள் அத்தனை முக்கியமானவ இல்லை. எனவே, வாரண்டி காலம், மின் சேமிப்புத் திறன், குளிர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி உங்களுக்குப் பொருத்தமான ஏசியை வாங்குவது நல்லது.