- Home
- Lifestyle
- Home Decor : நிம்மதியா தூங்கணுமா? இந்த 10 பொருட்களை உங்கள் படுக்கையறையில் இருந்து தூக்கி எறியுங்கள்.!
Home Decor : நிம்மதியா தூங்கணுமா? இந்த 10 பொருட்களை உங்கள் படுக்கையறையில் இருந்து தூக்கி எறியுங்கள்.!
படுக்கை அறையில் நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் நம்முடைய தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. அந்த பொருட்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Things you should remove from the bedroom
படுக்கை அறை என்பது ஓய்வு எடுக்கக்கூடிய இடமாகவும், அதே சமயம் புத்துணர்ச்சி பெற தரமான தூக்கத்தை அனுபவிக்கும் இடமாக இருக்க வேண்டும். இருப்பினும் நாம் பயன்படுத்தும் சில படுக்கையறை பொருட்கள் தூக்கமின்மையை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கின்றன. சில பொருட்கள் பாதிப்பில்லாததாக தோன்றினாலும் அது உங்கள் தூக்க சுழற்சியை சீர்குலைக்கலாம். நீங்கள் அடிக்கடி அமைதியின்மையுடன் எழுந்தால் அல்லது இரவில் ஓய்வெடுக்க சிரமப்பட்டால் உங்கள் அறையில் என்ன இருக்கிறது என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்படி உங்கள் அறையில் இருந்து அகற்ற வேண்டிய 10 பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அலங்கார தாவரங்கள்
படுக்கையறையில் அழகுக்காக பயன்படுத்தப்படும் சில தாவரங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. இவை மண்ணில் அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதால் பூஞ்சைகள் வளர்கின்றன. இவை காற்றில் வெளியிடப்படும் பொழுது அவை உங்கள் சுவாச மண்டலத்தை எரிச்சல் அடைய செய்து குறிப்பாக தூக்கத்தின் போது ஒவ்வாமை அல்லது பிற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆஸ்துமா உள்ள நபர்கள் அல்லது அதிக உணர்திறன் கொண்டவர்களுக்கு இந்த நிலைமை மோசமாகலாம். அதேபோல் துவைக்கப்படாத துணிகளை ஒரு கூடையில் வைத்திருப்பது பாக்டீரியா மற்றும் தூசிகள் படிய ஏதுவான இடமாகும். ஈரமான அல்லது வியர்வையில் நனைந்த துணிகள் விரும்பத்தகாத வாசத்தை ஏற்படுத்தி காற்றின் தரத்தை பாதிக்கின்றன. இதுவும் ஒவ்வாமை அல்லது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி தூக்கமின்மைக்கு காரணமாகின்றன.
உடற்பயிற்சி சாதனங்கள்
சிலர் படுக்கையறையில் உடற்பயிற்சி செய்யக்கூடிய டிரட்மில், ரெசிஸ்டன்ஸ் பேண்ட், டம்பள்ஸ் போன்ற உபகரணங்களை வைத்திருப்பார்கள். இது படுக்கையறையின் நிதானமான சூழ்நிலையை மாற்றும். உடற்பயிற்சி உபகரணங்கள் இருப்பது பெரும்பாலும் தரையின் இடத்தை குறைத்து அறையை இடைஞ்சலாக உணர வைக்கிறது. மேலும் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களில் வியர்வை மற்றும் பாக்டீரியாக்கள் படிந்திருப்பதால் அதிலிருந்து வெளிப்படும் துர்நாற்றம் சுகாதாரத்தையும் பாதிக்கலாம். எனவே படுக்கை அறையை உடற்பயிற்சி கூடமாக மாற்றுதல் கூடாது. அதேபோல் திறக்கப்படாத அஞ்சல்கள், புத்தகங்கள், சிதறிய ஆவணங்களின் குப்பைகள் ஆகியவை படுக்கை அறையின் அமைதியை சீர்குலைக்கின்றன. இவற்றை பார்க்கும் பொழுது அமைதியான சூழல் எழாத காரணத்தால் அதிகப்படியான குழப்பம், மன அழுத்தம் ஏற்படுகிறது. இது ஓரிடத்தில் அமைதியாக ஓய்வெடுப்பதை கடினமாக்குகிறது.
தேவையில்லாத அலங்காரப் பொருட்கள்
சில வீடுகளில் பிரகாசமான எல்இடி டிஜிட்டல் கடிகாரங்களை பயன்படுத்துவது வழக்கம். இதிலிருந்து வெளியேறும் ஒளியானது தூக்க சுழற்சியை குலைக்கிறது. இதன் காரணமாக மன தூக்கத்தை வரவழைக்கும் மெலோடனின் பாதிக்கப்படுகிறது. இந்த செயற்கை ஒளியானது தூக்கத்தை தாமதப்படுத்துவதால் விரைவில் தூக்கம் ஏற்படுவதில்லை. மேலும் தொடர்ந்து நேரத்தை பார்க்கும் உணர்வைத் தூண்டுவதால் பதட்டமும் அதிகரிக்கப்படுகிறது. நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் சீர்குலைகிறது. படுக்கையறையில் எந்த நோக்கமும் அல்லாத அரிதாகவே பயன்படும் அலங்காரப் பொருட்களும் அதிக தூசியை சேகரித்து காற்றில் வெளியிட தொடங்கும். இதன் காரணமாக சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு தூக்கம் கெட காரணமாகிறது.
ரூம் ஸ்பிரே
பலர் படுக்கை அறைகளில் ரூம் ஸ்ப்ரே பயன்படுத்துவது வழக்கம். சிலர் ஆட்டோமேட்டிக்காக வாசனையை வெளியிடும் ரூம் ஸ்பிரேக்களை பயன்படுத்துகின்றனர். இது தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது அது தூக்கத்தை கடுமையாக பாதிக்கிறது. மேலும் இதிலிருந்து வெளியாகும் ரசாயனங்கள் மற்றும் பிற கரிம சேர்மங்கள் கடுமையான தலைவலி சுவாசத்தில் எரிச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே ரூம் ஸ்ப்ரே பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அலங்கார தலையணைகள் படுக்கையின் தோற்றத்தை மேம்படுத்தலாம். ஆனால் இது நடைமுறைக்கு ஒத்து வராது. அதிகப்படியான தலையணைகள் இடத்தை அடைத்து தூக்கத்தை கடினமாக்குகின்றன எனவே தேவையில்லாத தலையணைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
எலக்ட்ரானிக் சாதனங்கள்
படுக்கை அறையில் மொபைல் போன், டேப்லெட், லேப்டாப் ஆகிய பொருட்களை பயன்படுத்துதல் கூடாது. இதிலிருந்து வெளிவரும் நீல ஒளியானது தூக்கத்தை தூண்டும் மெலோட்டனின் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கிறது. எனவே தூங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே இவற்றை ஒதுக்கி விட வேண்டும். இந்தப் பொருட்களை படுக்கையறையில் இருந்து வெளியில் அல்லது தள்ளி வைக்க முயற்சி செய்யுங்கள். படுக்கை அறையில் தொலைக்காட்சி வைத்திருப்பது தூங்கும் முன் மூளையை தூண்டிவிடும். இது தூக்க சுழற்சியை கடுமையாக பாதிக்கலாம். இது மனதை ரிலாக்ஸ் செய்யவிடாமல் தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ள வைக்கும். எனவே படுக்கை அறையில் தொலைக்காட்சியில் உள்ளிட்ட எந்த ஒரு எலக்ட்ரானிக் சாதனங்களையும் வைக்கக் கூடாது.
அறையின் நிறங்கள்
படுக்கையறை என்பது மிக அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும். படுக்கை அறையில் சுவர்களில் அல்லது திரைச்சீலைகளில் அதிக பிரகாசமான தீவிரமான நிறங்களை பயன்படுத்தக் கூடாது. இந்த நிறங்கள் மனதை தூண்டி மன அமைதியின்மையை ஏற்படுத்தி, ஓய்வு எடுக்க விடாமல் செய்யும். எனவே படுக்கை அறைக்கு அமைதியான நுட்பமான நிறங்களை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். மேற்குறிப்பிட்ட விஷயங்களை தவிர்ப்பதன் மூலம் உங்கள் படுக்கையறையை ஒரு அமைதியான ஓய்வு எடுக்கும் இடமாக மாற்றி உங்களால் சிறந்த தூக்கத்தை பெற முடியும்.