கடைசியாக சென்ற சிவன் கோயில் கருவறையில் மயில்சாமியின் உருவப்படம்.. கருவறையில் வைக்க என்ன காரணம்?
மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 18ஆம் தேதி அன்று இரவில் கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயில் நிகழ்வில் அதிகாலை வரை மயில்சாமி கலந்துக் கொண்டு வழிபட்டார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுடன் இணைந்து பல மறக்க முடியாத காமெடி காட்சிகளில் நடித்தவர் தான் நடிகர் மயில்சாமி. நடிகராக மட்டுமல்ல, மக்களுக்கு உதவுவதிலும் எப்போதும் ஆர்வம் கொண்டவர். பல குரல்களில் பேசும் மிமிக்ரி கலைஞரான மயில்சாமி, காமெடியில் கொடி கட்டி பறந்த வடிவேலு, விவேக் ஆகிய நடிகர்களுடன் சேர்ந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். இவருடைய தங்கபஷ்பம் காமெடி மிகவும் தனித்துவம் கொண்டது.
நடிப்பை தவிர மக்களுக்காக வீதிகளில் இறங்கி உதவிக்கரம் நீட்டுவதிலும் மயில்சாமியை நிகர் செய்ய முடியாது. ஏழை மாணவர்களின் படிப்பு செலவு, மருத்துவ செலவு, ஏழைகளுக்கு தன்னால் முடிந்த நலத்திட்ட உதவி என எந்த உதவியும் மறுக்காமல் செய்து வந்தார்.
ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். இவர் தீவிர சிவ பக்தர் என்பதை பலரும் அறிவர். அண்மையில் வந்த மகா சிவராத்திரியை உற்சாகமாக வரவேற்ற மயில்சாமிக்கு, இறுதி நாளும் அன்றுதான் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. கடந்த 18-ம் தேதி இரவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயில் நிகழ்ச்சியில் அதிகாலை வரை விழித்திருந்தார்.
இதையும் படிங்க: மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு.. எப்போது? எப்படி விரதம் இருந்தால் அம்மன் அருளை முழுமையாக பெறலாம்..
சிவனை வழிபட்ட திருப்தியில் அதிகாலை வீடு திரும்பிய மயில்சாமி, அங்கு மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த செய்தி திரையுலகினரை மட்டுமின்றி மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்னாரது மறைவுக்கு பின் நடந்த இறுதிச்சடங்கில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினரும், ரசிகர்களும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் மயில்சாமி கடைசியாக சென்று திரும்பிய மேகநாதீஸ்வரர் கோயில் கருவறையில் அவரின் உருவப்படம் வைத்து வழிபாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வழிபாட்டை செய்வதற்கு அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பது தான் காரணமாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சாமி ஆடுறவங்க சொல்லும் அருள் வாக்கு நிஜமா பலிக்குமா? அது உண்மையா? பின்னணி என்ன?