இப்படிப்பட்ட நபர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கிவிடுவது நல்லது..!!
ஒவ்வொருவருடைய குணாதிசியம், எண்ணவோட்டம், செயல்பாடு, சிந்தனை, மனநிலை உள்ளிட்டவற்றை வைத்து அவர்கள் தேவதூதர்களா? அல்லது சுயநலன் கொண்டவர்களா? என்பதை நாம் கண்டறியலாம்.

நம் வாழ்வில் தினசரி பலதரப்பட்ட மனிதர்களை சந்திப்பது இயல்பானது தான். ஒவ்வொரு மனிதனும் எப்படி இவ்வளவு வேறுபாடுகின்றான் என்கிற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால் அதற்குரிய பதில் உலகமே ஒரு நாடக மேடை, அதில் நீங்களும் நானும் நடிகர்கள் என்கிற வாக்கியம் தான் காரணம். ஒவ்வொருவருடைய குணாதிசியம், எண்ணவோட்டம், செயல்பாடு, சிந்தனை, மனநிலை உள்ளிட்டவற்றை வைத்து அவர்கள் தேவதூதர்களா? அல்லது சுயநலன் கொண்டவர்களா? என்பதை நாம் கண்டறியலாம். அதன்படி சுயநலமிக்கவர்களிடம் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் முக்கியம். ஒருவருடைய குணாதிசியம் தன்நலம் கொண்டதாக உங்களுக்கு தோன்றினால், அவர்களிடம் இருந்து விலகுவது நல்ல தீர்வாக அமையும். அந்த வகையில் சுயநலம் கொண்டவர்களை அடையாளம் காண்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
Image: Getty Images
சுயநலன் கொண்டவர்கள்
ஒரு சுயநலவாதி மற்றவர்களின் உணர்வுகள் அல்லது தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தனக்கு மட்டுமே நன்மை பயக்கும் முடிவுகளை எடுக்கக் கூடியவராக இருப்பார். இதற்கு தாய், தந்தை, மனைவி, உடல் பிறந்தவர்கள் என யாருமே அவர்களுக்கு கணக்கு கிடையாது. ஒருவேளை தனக்கு பிறந்த குழந்தைகள் மீது வேண்டுமானால் அக்கறை இருக்கும். அதுவும் அவர்கள் வாயிலாக தனக்கு ஆதாயம் உள்ளது என்றால் மட்டுமே. இல்லையென்றால் அவர்களும் சுயநலமிக்கவர்களுக்கு வேண்டாதவர்கள் தான்.
சமரசமற்றவர்கள்
அவர்கள் எதற்கும் அவ்வளவு சீக்கரம் சமரசம் அடையமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மற்றவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை விட தங்கள் சொந்த தேவைகள் மற்றும் விருப்பங்களை முதன்மைப்படுத்துகின்றனர். மேலும் மற்றவர்களின் நலனுக்காக அவர்கள் விரும்பும் ஒன்றை விட்டுவிட, எப்போதும் அவர்கள் தயாராக இருப்பது கிடையாது. அது சொந்த குடும்பம் என்றாலும், அவர்களுக்கு கணக்கு தான்.
ஆணவமிக்கவர்கள்
ஒரு சுயநலவாதி மற்றவர்களை விட எப்போதும் தானே மேன்மையானவர் என்கிற உணர்வைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இதுவே அவர்களுக்கு பிரச்னையாகக் கூட அமையும். எனினும், அதை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இதுபோன்று செயல்படுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொன்னாலும் கேட்கமாட்டார்கள். மற்றவர்களை விட தாங்கள் சிறந்தவர்கள் அல்லது தகுதியானவர்கள் என்கிற எண்ணம், அவர்களை விட்டு போகாது.
சுய தம்பட்டம் கொண்டவர்கள்
சுயநிலம் மிக்கவர்களுக்கு மற்றவர்கள் மீது எந்தவித அக்கறையும் இருக்காது. அவர்களுடைய நல்லது, கெட்டது உள்ளிட்டவற்றில் ஆர்வங்காட்ட மாட்டார்கள். தங்களைப் பற்றியும் தங்கள் சாதனைகள் அல்லது அனுபவங்களைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். ஒருவேளை மற்றவர் யாராவது கடினமாக உழைத்து முன்னுக்கு வந்தாலும் பொறாமைப்பட மட்டுமே தெரியும். இதனால் இவர்களுக்கு உண்மையான நண்பர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்
காபி அல்லது டீ குடித்த பிறகு சோர்வு ஏற்படுகிறதா..? அலட்சியம் வேண்டாம்..!!
நன்றியுணர்வு அற்றவர்கள்
ஒரு சுயநலவாதி, மற்றவர்களிடமிருந்து பெறும் உதவி அல்லது ஆதரவிற்காக நன்றியையோ பாராட்டுதலையோ வெளிப்படுத்துவது கிடையாது. அவர்கள் எப்போதும் தங்களுக்கு உதவி செய்தவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது. அவர்கள் செய்த உதவி மட்டுமே போதும், ஆனால் அவர்கள் வேண்டாம் என்கிற மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களிடம் இருந்து எவ்வளவு உதவி வேண்டுமானாலும் கேட்பார்கள், ஆனால் அதற்கு கைமாறு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்காது.