ஐபிஎல் 2021 மெகா ஏலம்: 2 மிகப்பெரிய மேட்ச் வின்னர்களை கழட்டிவிடும் கேகேஆர்.. புதிய கேப்டன்
ஐபிஎல் 2021க்கான மெகா ஏலத்தில் கேகேஆர் அணி தக்கவைக்க வேண்டிய வீரர்கள் குறித்து முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இந்த சீசனில் 14 புள்ளிகளை பெற்ற கேகேஆர் அணி, நெட் ரன்ரேட்டின் அடிப்படையில், பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து லீக் சுற்றிலேயே வெளியேறியது.
சீசன் இடையில் கேகேஆர் அணியின் கேப்டன் மாற்றம், அந்த அணியில் ஏதோ ஒரு சிக்கல் இருப்பதை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அந்த அணியில் மோர்கன், கம்மின்ஸ், நரைன், ரசல் என வெளிநாட்டு மேட்ச் வின்னர்கள் பலர் இருந்தும் கூட அந்த அணியால் பிளே ஆஃபிற்கு முன்னேற முடியவில்லை.
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ள நிலையில், கேகேஆர் அணி தக்கவைக்க வேண்டிய வீரர்கள் குறித்து ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, ஷுப்மன் கில், ஆண்ட்ரே ரசல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய மூவரையும் கேகேஆர் அணி கண்டிப்பாக தக்கவைக்க வேண்டும். ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்க வேண்டும். கில்லிடம் கேப்டன்சி திறன் இருக்கிறது என்பதை கேகேஆர் அணி கவனித்திருக்குமேயானால், இனியும் அவரை கேப்டனாக்கும் முடிவில் தாமதம் காட்டக்கூடாது.
கம்மின்ஸ் மற்றும் நரைன் ஆகிய இருவருக்கும் பெரிய தொகை கொடுத்திருக்கிறார்கள். எனவே அவர்களை கழட்டிவிட வேண்டும். மோர்கனையும் கழட்டிவிட வேண்டும். இவர்கள் மூவரையும் கழட்டிவிட்டு, பின்னர் ஏலத்தில் எடுத்தால் அவர்களுக்கு இப்போது கொடுக்கப்படும் தொகையை விட குறைவான தொகைக்கே அவர்களை எடுக்க முடியும் என்று ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.