1976 முதலே அழிவைச் சந்தித்துவரும் ஜோஷிமத்! அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்!
நிலச்சரிவுகளால் நிலைகுலைந்து போயிருக்கும் உத்தராகண்டின் ஜோஜிமத் பகுதி 1976 முதலே அபாயகரமான பகுதியாகவே இருந்துவருகிறது என்று புவியியலாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் இமாலய மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் நூற்றுக்கணக்கான வீடுகளில் தரையிலும் சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஜோஜிமத் நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 500 வீடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் வீதியில் திரண்டு அரசு நடிவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நிலைமையை ஆய்வு செய்து, அப்பகுதியில் நடைபெற்றுவந்த அரசின் கட்டுமானத் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
அப்பகுதியின் புவியியல் அமைப்புதான் இந்த பாதிப்புகளுக்குக் காரணம் என்றும் அங்கு உள்ள நிலம் உறுதியற்று இருப்பதால் பெரிய கட்டடங்களையும் அதிக மக்கள்தொகையையும் தாக்குப்பிடிக்காது என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
நீர்மின் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் போன்றவை அங்கு உள்ள சரிவான நிலப்பகுதிகளை மேலும் நிலைத்தன்மை அற்றவையாக ஆக்கிவிட்டன என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இதுமட்டுமின்றி பெருகிவரும் மக்கள்தொகையும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. விஷ்ணுப்பிரயாகை நதியின் ஓட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெரிய பாறைகள் பெயர்ந்து விழுந்துள்ளன.
வாடியா இமயமலை புவியியல் நிறுவனம் 2022ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஜோஷிமத் கட்டப்பட்ட இடத்தின் குறைவான நிலைத்தன்மை கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுருக்கிறது.
1976ஆம் ஆண்டு வெளியான அறிக்கையிலேயே ஜோஷிமத் பகுதி மக்கள் வசிக்க ஆபத்தான பகுதி என்று கூறப்பட்டுள்ளது என புவியியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.