இந்தியா vs பாகிஸ்தான்! ராணுவ பலம் யாருக்கு அதிகம்? முப்படையிலும் கெத்து யார்?
பஹல்காமில் பயங்கரவாதிகளின் கொடூர செயலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தானின் ராணுவ பலம் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

India vs Pakistan Military Strength: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. இந்தியாவுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. தங்கள் வான் எல்லையில் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே யாருக்கு ராணுவ பலம் அதிகம் என்பதை பார்ப்போம்.
India vs Pakistan
மொத்த ராணுவ வீரர்கள்
குளோபல் ஃபயர்பவர் ஸ்ட்ரென்த் தரவரிசைப்படி, உலகின் நான்காவது வலிமையான ராணுவம் இந்தியாவிடம் உள்ளது. பாகிஸ்தான் முதல் 10 இடங்களுக்கு வெளியே உள்ளது. அதாவது 12வது இடத்தில் தான் உள்ளது. குளோபல் ஃபயர்பவர் இன்டெக்ஸ் படி, இந்தியாவின் மதிப்பெண் 0.1184. பாகிஸ்தானின் மதிப்பெண் வெறும் 0.2513. குறைந்த மதிப்பெண் கொண்ட நாடு வலிமையானதாகக் கருதப்படுகிறது. 0.0000 மதிப்பெண் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் மொத்தம் 51,37,550 ராணுவ வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தானில் 17,04,000 வீரர்கள் மட்டுமே உள்ளனர். இந்தியாவில் 14,55,550 செயல்பாட்டு வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தானில் 6,54,000 வீரர்கள் மட்டுமே உள்ளனர். இந்தியாவில் 25,27,000 துணை ராணுவப் படையினர் உள்ளனர். பாகிஸ்தானில் வெறும் 5 லட்சம் துணை ராணுவப் படையினர் தான் இருக்கின்றனர்.
India vs Pakistan Military Strength
விமானப்படை வீரர்கள் எத்தனை?
இந்தியாவில் 3,10,575 விமானப்படை வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தான் 78,128 விமானப்படை வீரர்களை வைத்துள்ளது. இந்தியாவிடம் 2229 விமானங்கள் உள்ளன. இதில் 513 போர் விமானங்கள், 130 தாக்குதல் விமானங்கள், 351 பயிற்சி விமானங்கள், 899 ஹெலிகாப்டர்கள் மற்றும் 80 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 1399 விமானங்கள் உள்ளன. இதில் 328 போர் விமானங்கள், 90 தாக்குதல் விமானங்கள், 565 பயிற்சி விமானங்கள், 373 ஹெலிகாப்டர்கள் மற்றும் 57 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன.
India vs Pakistan Clash
கடற்படை வீரர்கள் எத்தனை?
இந்தியாவில் 1,42,252 கடற்படை வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தானில் 1,24,800 கடற்படை வீரர்கள் உள்ளனர். இந்தியாவிடம் 2 விமானம் தாங்கி கப்பல்கள், 13 அழிப்பான்கள், 14 போர்க்கப்பல்கள், 18 கார்வெட்டுகள், 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 135 ரோந்து கப்பல்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 9 போர்க்கப்பல்கள், 9 கார்வெட்டுகள், 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 69 ரோந்து கப்பல்கள் உள்ளன.
Pahalgam Terror Attack
பீரங்கிகள் யாரிடம் அதிகம்?
இந்தியாவிடம் 4201 டாங்கிகள், 1,48,594 வாகனங்கள், 100 சுயமாக இயங்கும் பீரங்கிகள், 3975 இழுவை பீரங்கிகள் மற்றும் 264 ராக்கெட் பீரங்கிகள் உள்ளன. பாகிஸ்தானிடம் 2627 டாங்கிகள், 17516 வாகனங்கள், 662 சுயமாக இயங்கும் பீரங்கிகள், 2629 இழுவை பீரங்கிகள் மற்றும் 600 ராக்கெட் பீரங்கிகள் உள்ளன. இந்தியாவை ஒப்பிடும்போது பாகிஸ்தானின் ராணுவ பலம் மிக மிக குறைவே. ஆனாலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வளர்த்து விட்டு அப்பாவி மக்களை இரையாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் சம்பவம்! மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு!