130 கி.மீ வேகம்.. சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை வருகிறது - முழு விபரம்
சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களை இங்கு காணலாம்.
உலகப் புகழ் பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான சென்னை ஐசிஎஃப்-ல் தற்போது வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்துகிறது. இதுவரை 25 வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலின் சேவை புதுடெல்லி - வாரணாசி இடையே கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ல் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, தயாரிக்கப்பட்ட 23 வந்தே பாரத் ரயில்கள், பல்வேறு வழித்தடங்களில் தினமும் 46 சர்வீஸ்களாக இயக்கப்படுகின்றது. தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது இதனை போலவே, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையேயும், சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையேயும் தலா ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகளால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் வகை ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 27 ஆம் தேதி ஒரே நேரத்தில் பல்வேறு வழித்தடங்களில் 5வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். தற்போது 24 மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் - திருப்பதி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான தேவை இருக்கிறது. இந்த தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க வாரியத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே அதிகபட்சமாக மணிக்கு130 கி. மீ. வேகத்தில் செல்ல ரயில் பாதைகள் தயாராக உள்ளது. ரயில்வே வாரியம் ஒப்புதல் கிடைத்த பிறகு, சென்னை - திருப்பதி வந்தே பாரத் ரயிலுக்கான கால அட்டவணை, கட்டணம், பயண நேரம் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
ரூம் எடுக்க அதிக செலவா.? குறைந்த விலையில் ஹோட்டல் வசதி! IRCTC திட்டம் தெரியுமா உங்களுக்கு?