இந்திய மாணவர்களை சுத்த விடும் அமெரிக்க விசா! பேசித் தீர்க்க முயலும் இந்தியா!
அமெரிக்க மாணவர் விசா பெறுவதில் ஏற்படும் தாமதம் குறித்து இந்திய அரசு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தை அமெரிக்க தூதரகம் மற்றும் வெளியுறவுத் துறையுடன் விவாதித்துள்ளது.

அமெரிக்க மாணவர் விசா தாமதம்
அமெரிக்க மாணவர் விசா பெறுவதில் இந்திய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து இந்திய அரசு அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
விரிவான ஸ்கிரீனிங் மற்றும் சரிபார்ப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை பேச்சுவார்த்தை
இந்நிலையில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாக, வெளியுறவு அமைச்சகம் (MEA) இந்த பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. புது டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்துள்ளது.
வெளிவிவகாரங்களுக்கான இணை அமைச்சர் (MoS) கீர்த்தி வர்தன் சிங் கூறுகையில், விசா வழங்குவது என்பது அந்தந்த நாட்டின் இறையாண்மை உரிமை என்ற போதிலும், அமெரிக்க விசா பெறுவதில் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து கவலைகளை எழுப்பி வருகிறது என்றார்.
இந்திய வெளியுறவுத்துறை பதில்
வியாழக்கிழமை ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தை அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை ஆகியவற்றுடன் விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மாணவர் விசா விவகாரங்கள் குறித்து இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசுக்குத் தெரியுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு கீர்த்தி வர்தன் சிங் இந்த பதிலை அளித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள்
இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களில் மிகப் பெரிய குழுவாக உள்ளனர். மூன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உள்பட 14 ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் குழுவும், இந்திய மாணவர்களுக்கு பாதிக்கும் விசா வழங்குவதில் தாமதங்களை சரிசெய்யுமாறு வெளியுறவுத் துறையை வலியுறுத்தியுள்ளது.
டிரம்ப் அறிவித்த விசா நிறுத்தம்
டிரம்ப் நிர்வாகம் மே 2025 இல், அதன் உலகளாவிய அனைத்து தூதரகங்களுக்கும் புதிய மாணவர் விசா நேர்காணல்களை நிறுத்துமாறு உத்தரவிட்டது. மேலும், பார்வையாளர் விசா விண்ணப்பங்களை வழங்க வேண்டாம் என்று கூறியது. இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த மாதம் மாணவர் விசா விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிக்கத் தொடங்கியது.

