ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பு: பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு!
5 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. இலவசமாக புதுப்பிக்க ஏழு வயதுக்குள் புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் ஆதார் எண் ரத்து செய்யப்படலாம்.

ஆதார் ஆணையம் நினைவூட்டல்
ஆதார் ஆணையம் (UIDAI) செவ்வாய்க்கிழமை (ஜூலை 15, 2025) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 5 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்குமாறு பெற்றோர்களை ஆதார் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இலவசமாக அப்டேட் செய்யலாம்
குழந்தைகள் ஏழு வயது ஆவதற்குள் பயோமெட்ரிக் புதுப்பிப்பை மேற்கொண்டால், ஆதார் பதிவு மையங்களில் இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்திற்குப் பிறகு, பயோமெட்ரிக் புதுப்பிப்பைச் செய்யாதவர்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் எண்களை ரத்து செய்ய நேரிடும் என்று ஆணையம் கூறியுள்ளது. ஒரு குழந்தை ஏழு வயதை அடைந்த பிறகு இந்த விண்ணப்பம் செய்தால், ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சேவைகளைப் பெற
"புதுப்பிக்கப்பட்ட பயோமெட்ரிக் கொண்ட ஆதார், வாழ்க்கையை மேலும் எளிமையாக்கும். பள்ளிச் சேர்க்கை, நுழைவுத் தேர்வுகளுக்குப் பதிவு செய்தல், கல்வி உதவித்தொகைகள், நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) போன்ற சேவைகளைத் தடையின்றி பெறுவதை ஆதார் பயன்பாடு உறுதி செய்கிறது" என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும்
"பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை ஆதார் அட்டையில் உடனடியாகப் புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்றும் ஆதார் ஆணையம் கேட்டுக்கொண்டு இருக்கிறது.
குழந்தைகளுக்கான பயோமெட்ரிக்
5 முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் அப்டேட் செய்ய, ஆதார் வழங்கிய நிறுவனம் நினைவூட்டல் செய்திகளை அனுப்பி வைக்கிறது. அவர்களின் ஆதார் அட்டையில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு
"ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யும்போது கைரேகை மற்றும் கருவிழி பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்படுவதில்லை, ஏனெனில் அந்த வயதில் இவை முழுமையாக வளர்ச்சி அடைவதில்லை" என்று ஆதார் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.