- Home
- இந்தியா
- இன்றைய TOP 10 செய்திகள்: தேர்தலில் வென்ற சி.பி. ராதாகிருஷ்ணன்... இசைஞானிக்கு பாராட்டு விழா...
இன்றைய TOP 10 செய்திகள்: தேர்தலில் வென்ற சி.பி. ராதாகிருஷ்ணன்... இசைஞானிக்கு பாராட்டு விழா...
சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இதற்கிடையில், தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நேபாளத்தில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. இன்றைய TOP 10 செய்திகள் இதோ…

துணை ஜனாதிபதியான சி.பி. ராதாகிருஷ்ணன்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவர் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றார். மொத்தம் 767 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், அதில் 15 வாக்குகள் செல்லாதது என அறிவிக்கப்பட்டது.
வாரத்தில் 1 நாள் மட்டும் அரசியல்!
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் எந்தெந்த தினங்களில் எந்தெந்த பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. சுற்றுப்பயணத்திற்கு சனிக்கிழமைகளை மட்டும் தேர்வு செய்திருப்பது விமர்சனத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது.
அப்துல் கலாமுக்குப் பிறகு சி.பி. ராதாகிருஷ்ணன்!
சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றியின் மூலம் தமிழகத்திலிருந்து இந்த உயர் பதவிக்கு வந்த இரண்டாவது நபர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
இதற்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன் இருவரும் துணை குடியரசுத் தலைவராகவும் குடியரசுத் தலைவராகவும் இருந்தவர்கள். அப்துல் கலாம் 2002 முதல் 2007 வரை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார்.
எடப்பாடிக்கு அடுத்த 'ஷாக்' கொடுத்த செங்கோட்டையன்
செங்கோட்டையன் ஹரித்வார் செல்வதாக கூறி விட்டு டெல்லி சென்றார். அங்கு அவர் பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செங்கோட்டையன், ''உங்களிடம் ஹரித்வார் செல்வதாக கூறி விட்டு டெல்லி சென்றேன். அங்கு அமித்ஷாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதேபோல் நிதியமைச்சரையும் (நிர்மலா சீதாராமனையும்) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக வலுவடைய வேண்டும் என்று அமித்ஷாவிடம் கூறினேன். அதிமுக வலிமை பெற தொடர்ந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வேன்'' என்று தெரிவித்தார்.
தமிழகத்தின் வேர்களை வலுப்படுத்தும் பாஜக
பாஜக தென்னிந்தியாவில் தனது வேர்களை வலுப்படுத்த முயற்சிக்கிறது. சிபி ராதாகிருஷ்ணனின் வெற்றி பாஜக தமிழ்நாட்டில் தன்னை நிலைநிறுத்த உதவும். தென்னிந்தியாவில் ஒரு வட இந்தியக் கட்சியாக பாஜக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த வெற்றியின் மூலம் பாஜக இப்போது அதை கடுமையாக மறுக்க முடியும்.
சிபி ராதாகிருஷ்ணனின் வெற்றிக்குப் பிறகு, என்டிஏ கூட்டணி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த கேள்விகளை எழுப்ப ஒரு வாய்ப்பு கிடைகத்திருக்கிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள பிஜேடி, பிஆர்எஸ் மற்றும் அகாலிதளம் ஆகியவை விலகியே இருந்து வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே பாஜக எதிர்க்கட்சி கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இளையராஜாவிற்கு பாராட்டு விழா
இளையராஜாவின் 50 ஆண்டு கால திரையிசைப் பயணத்தையும், லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனி அரங்கேற்றம் மூலம் முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனியை முதல் இந்தியராக நிகழ்த்திய சாதனையையும் கொண்டாடும் வகையில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இசை நிகழ்ச்சி தள்ளிக்கொண்டே சென்றது. இந்த நிலையில், சிம்பொனியில் சிகரம் தொட்ட தமிழன் -இசைஞானி இளையராஜாவின் பொன்விழா 50 ஆண்டு பாராட்டுவிழா வருகிற 13-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி தீயில் கருகி பலி!
நேபாளத்தில் நடந்து வரும் Gen Z தலைமுறை இளைஞர்களின் போராட்டங்களுக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் ஜாலநாத் கானலின் மனைவி ராஜ்யலக்ஷ்மி சித்ரகர் உயிரிழந்தார். போராட்டக்காரர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு தீ வைத்ததால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காத்மாண்டுவின் டல்லு பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. தீ விபத்தில் பலத்த காயமடைந்த ராஜ்யலக்ஷ்மி சித்ரகர், கீர்த்திபூர் தீக்காய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
கத்தாரில் புகுந்து ஹமாஸ் தலைக்கு குறி வைத்த இஸ்ரேல்!
இஸ்ரேலியப் படைகள் கத்தாரின் தலைநகரான தோஹாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் புதிய போர் நிறுத்த முன்மொழிவு குறித்து ஹமாஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணிய வைத்தை GenZ போராட்டம்!
நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, இளம் தலைமுறையினர் நடத்திய வரலாறு காணாத போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில், பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
நாட்டின் முக்கிய தலைவர்களின் வீடுகள் தாக்கப்பட்டதோடு, அமைச்சர்களும் பதவி விலகியதால் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
ஆசிய கோப்பை பரிசுத்தொகை
ஆசிய கோப்பை தொடரில் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடரின் பரிசுத்தொகையை பொறுத்தவரை கோப்பையை வெல்லும் அணிக்கு ₹2.6 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். இரண்டாம் பிடிக்கும் அணிக்கு ₹1.3 கோடி பரிசுத்தொகை கிடைக்கும். ஆசிய கோப்பையில் தொடர் நாயகன் விருது வெல்பவர்களுக்கு ₹12.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
2023 ஆம் ஆண்டு ஓடிஐ வடிவத்தில் நடந்த ஆசியக் கோப்பையில் இலங்கையை வீழ்த்திய இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா ₹1.25 கோடி பரிசு பெற்றது. இப்போது 2025 ஆசிய கோப்பையில் ₹2.6 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசுத்தொகை இரண்டு மடங்காகியுள்ளது.