இந்தியாவின் முதல் 5 பணக்கார மாநிலங்கள்: தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?
இந்தியாவின் முதல் ஐந்து பணக்கார மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதுகுறித்த விவரங்களை இங்கு காணலாம்
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், பல்வேறு மாநிலங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவிலான செழுமை மற்றும் பொருளாதார அளவீடுகளை கொண்டுள்ளன. அதில், பல மாநிலங்கள் பணக்காரர்களாகவும், பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறியும் உள்ளது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள முதல் ஐந்து பணக்கார மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
1. மகாராஷ்டிரா
நாட்டின் பணக்கார மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிர மாநிலம் உள்ளது. மகாராஷ்டிராவின் பொருளாதாரம் 2021-22 இல் ரூ.31.98 லட்சம் கோடியாக உள்ளது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியுடன் (GSDP) இந்தியாவின் மிகப்பெரிய மாநிலப் பொருளாதாரமாக மகாராஷ்டிரா உள்ளது. அம்மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2021-22 இல் 10.4 சதவீதமாக இருந்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயம் மற்றும் தொழில்துறை பொருளாதாரம் உள்ளது. அம்மாநிலத்தில் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் துறையாக சேவைத் துறை உள்ளது. மாநிலத்தின் தொழிலாளர்களில் 45 சதவீதம் விவசாயத் தொழிலில் உள்ளனர். அந்ததுறை GSDP க்கு 15 சதவீதம் பங்களிக்கிறது. தொழில்துறையில் 26% பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அந்ததுறை GSDP க்கு 24.86% பங்களிக்கிறது.
IT/ITeS, மருந்துகள், உயிரி தொழில்நுட்பம், ஜவுளி, வாகனம், ரத்தினங்கள் மற்றும் நகைகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளுக்காக மகாராஷ்டிரா முழுவதும் பல்வேறு சிறப்பு பொருளாதார மண்டலங்களை (SEZ) அம்மாநில அரசு ஊக்குவித்து வருகிறது.
2. தமிழ்நாடு
தமிழ்நாடு மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாடு, இந்த பட்டியலில் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. மாநிலத்தின் பொருளாதாரம் உற்பத்தி, விவசாயம் மற்றும் சேவைத் தொழில்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் ஜவுளி, பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் உள்ளிட்ட வலுவான உற்பத்தித் துறை உள்ளது. சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் வங்கி ஆகியவற்றை உள்ளடக்கிய சேவைத் துறையும் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. அரிசி, கரும்பு, பருத்தி ஆகியவை முக்கிய பயிர்களாக இருப்பதால், விவசாயத் துறை மாநிலத்தின் பொருளாதாரத்தின் பிரதானமாக உள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் தமிழ்நாடும் முன்னணியில் உள்ளது.
மாநிலத்தில் நன்கு வளர்ந்த உள்கட்டமைப்பு மற்றும் நல்ல கல்வி அமைப்பு உள்ளது. 320.27 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.24.85 லட்சம் கோடியாக உள்ளது. மாநிலத்தின் பொருளாதாரம் ஆரோக்கியமான விகிதத்தில் வளர்ந்து வருகிறது, எதிர்காலத்தில் அது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. குஜராத்
பொருளாதாரம் இந்தியாவில் மிகவும் துடிப்பான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் குஜராத் மாநிலமும் ஒன்றாகும். 2021-22ல் ரூ.22.03 லட்சம் கோடி மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியுடன் (GSDP) நாட்டின் மூன்றாவது பெரிய மாநிலப் பொருளாதாரமாக குஜராத் உள்ளது.
ஜவுளி, ரசாயனங்கள், வைரம், நகைகள், மருந்துகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் பொறியியல் ஆகியவை மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு மிகவும் பங்களிக்கும் துறைகள். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுடன் (SEZs) பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பல முயற்சிகளை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
4. உத்தரப்பிரதேசம்
க்கள்தொகை அடிப்படையில் உத்தரப்பிரதேசம் நாட்டின் மிகப்பெரிய மாநிலமாகும். இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாகவும் இது உள்ளது. அம்மாநிலத்தின் பொருளாதாரம் ரூ.21.74 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலப் பொருளாதாரமாக உத்தரப்பிரதேசம் உள்ளது.
200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மாநிலத்தில், விவசாயத் துறை அதிக வேலைவாய்ப்பைக் கொண்டுள்ளது. முக்கிய விவசாய விளைப் பொருட்களாக கோதுமை, அரிசி, கரும்பு மற்றும் பருத்தி ஆகியவை உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 55% சேவைத் துறை பங்களிக்கிறது.
இது தவிர, நிலக்கரி, சுண்ணாம்பு மற்றும் டோலமைட் போன்ற கனிமங்களை உற்பத்தி செய்யும் மாநிலமாக உள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளி, தோல், இரசாயனங்கள் மற்றும் மின்னணுவியல் துறைகளை உள்ளடக்கிய தொழில்துறையின் பங்கு 28 சதவீதமாக உள்ளது.
5. கர்நாடகா
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தில் ரூ.18.85 லட்சம் கோடியுடன் கர்நாடக மாநிலம் இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கர்நாடக மாநிலம் நாட்டின் சில பெரிய தொழில்கள் மற்றும் நிறுவனங்களின் தாயகமாகவும் உள்ளது. சேவைத் துறை மாநிலத்தின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 60 சதவீதம் சேவைத்துறை பங்களிக்கிறது.
மாநிலத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது, நாட்டின் சில பிரபலமான சுற்றுலா தலங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. வாகனம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத் தொழில்கள் உட்பட உற்பத்தித் துறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20% பங்களிக்கிறது. காபி மற்றும் தேயிலை உற்பத்தியில் முக்கிய மாநிலமாக இருக்கும் அதே வேளையில், விவசாய உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும்.
அடுத்த 5 இடங்கள்
அதேபோல், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் ரூ.17.13 லட்சம் கோடியுடன் மேற்குவங்கம் 6ஆவது இடத்திலும், ரூ.13.34 லட்சம் கோடியுடன் ராஜஸ்தான் 7ஆவது இடத்திலும், ரூ.13.04 லட்சம் கோடியுடன் தெலங்கானா 8ஆவது இடத்திலும், ரூ.12.01 லட்சம் கோடியுடன் ஆந்திரா 9ஆவது இடத்திலும், ரூ.11.5 லட்சம் கோடியுடன் மத்தியப்பிரதேசம் 10ஆவது இடத்திலும் உள்ளது.