பெண்கள் வெளியில போகாதீங்க... இல்லேனா வன்புணர்வு நடக்கும் - குஜராத்தில் வெடித்த சர்ச்சை!
குஜராத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேனர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 'இரவு நேர விருந்துகளுக்குச் செல்ல வேண்டாம், இல்லையெனில் வன்புணர்வுக்கு ஆளாவீர்கள்' போன்ற வாசகங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

குஜராத்தில் பெண்கள் பாதுகாப்பு
குஜராத் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வைக்கப்பட்ட பேனர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. "இரவு நேர விருந்துகளுக்குச் செல்ல வேண்டாம், இல்லையெனில் நீங்கள் வன்புணர்வுக்கு ஆளாவீர்கள்" போன்ற வாசகங்கள் கொண்ட இந்த பேனர்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, குஜராத் காவல்துறை இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சனிக்கிழமை அன்று சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளிகளில், அகமதாபாத் போக்குவரத்து காவல்துறையின் ஆதரவுடன் இந்த பேனர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
சர்ச்சைக்குரிய பேனர்கள்
இதுகுறித்து அகமதாபாத் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சஃபின் ஹசன் கருத்து தெரிவித்துள்ளார். இந்த பேனர்களை ஒட்டியது 'சதர்கதா குழு' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் என்று அவர் கூறியுள்ளார். போக்குவரத்துக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனுமதி வாங்கிய அவர்கள், அதன் வரம்பை மீறி இந்த சர்ச்சைக்குரிய பேனர்களை ஒட்டியுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
இந்த பேனர்களில், "இரவு நேர விருந்துகளுக்குச் செல்ல வேண்டாம், நீங்கள் வன்புணர்வுக்கு அல்லது கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகலாம்" என்றும் "உங்கள் நண்பருடன் இருண்ட, தனிமையான இடங்களுக்குச் செல்ல வேண்டாம், வன்புணர்வுக்கு அல்லது கூட்டு வன்புணர்வுக்கு ஆளானால் என்ன செய்வது?" போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
விரிவான விசாரணைக்கு உத்தரவாதம்
இந்த விவகாரம் குறித்து துணை ஆணையர் நீதா தேசாய் கூறுகையில், "சதர்கதா குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பள்ளி, கல்லூரிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த எங்களிடம் அனுமதி கேட்டனர். ஆனால், இந்த சர்ச்சைக்குரிய பேனர்கள் பற்றி அவர்கள் எங்களிடம் தெரிவிக்கவில்லை" என்று கூறினார்.
இந்த பேனர்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், மாநகராட்சி அனுமதி பெறப்பட்டதா, இதன் நோக்கம் என்ன, யார் இதற்கு பொறுப்பு போன்ற விவரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சி குஜராத் பிரிவு, ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.