விக்சித் பாரத் 2047க்கான ஸ்டார்ட்அப் மஹாகும்ப் டெல்லியில் தொடங்கியது!
Startup Mahakumbh Kicks Off In Delhi : டெல்லியில் ஸ்டார்ட் அப் மகாகும்பத்தின் 3 நாட்கள் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்வில் முதலீட்டாளர்கள், பங்கேற்பாளர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஸ்டார்ட்அப் மகாகும்ப் 2025
Startup Mahakumbh 2025 : இந்தியாவில் ஸ்டார்ட்அப்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் புதிய ஐடியாக்கள், புதிய பிசினஸ் மாடல்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் பற்றி பேசுகின்றனர். நேற்று ஏப்ரல் 3 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற 'ஸ்டார்ட்அப் மகாகும்ப் 2025' நிகழ்ச்சியின் 2ஆவது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். மேலும், இந்த நிகழ்வில் அரசு மற்றும் வணிக பிரமுகர்கள், புதிய யுக கண்டுபிடிப்பாளர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்டார்ட்அப் இந்தியா @ 2047 - பாரதக் கதையை வெளிப்படுத்துதல்
ஸ்டார்ட்அப் மஹாகும்பின் 2ஆவது ஆண்டின் கருப்பொருள் "ஸ்டார்ட்அப் இந்தியா @ 2047 - பாரதக் கதையை வெளிப்படுத்துதல்" என்பதாகும். 2024 ஆம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வு, இந்திய தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களின் புதுமைகளை உலக அளவில் அங்கீகரிப்பதற்கும் அரசாங்கத்தால் ஒரு முக்கிய முயற்சியாக உருவெடுத்துள்ளது.
ஸ்டார்ட்அப் இந்தியா @ 2047 - பாரதக் கதையை வெளிப்படுத்துதல்
நேற்று தொடங்கிய இந்த நிகழ்வில் 1000க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். அதோடு, 3000க்கும் அதிகமான அரங்குகளும் இடம் பெற்றன. இந்த நிகழ்வில் DPIIT, GeM மற்றும் MeitY போன்ற நிறுவனங்களின் அரங்குகளும், Paytm, Groww மற்றும் Swiggy போன்ற தொழில்துறை நிறுவனங்களின் அரங்குகளும் இடம்பெற்றன.
ஸ்டார்ட்அப் இந்தியா
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வர்த்தகம், தொழில்துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா கூறியிருப்பதாவது: இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் வரும் 2047ஆம் ஆண்டுக்குள்ளாக இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதை உறுதி செய்வதற்கான வளர்ச்சிக்கு பங்களிப்பார்கள். சிறந்த வலிமையான இந்தியாவை உருவாக்க ஸ்டார்ட் அப் நிபுணர்கள் மற்றும் தொழில்துறை ஒத்துழைக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.
ஸ்டார்ட் அப் மஹாகும்ப் 2025
இதைத் தொடர்ந்து பேசிய DPIIT இணை செயலாளர் ஸ்ரீ சஞ்சீவ் கூறியிருப்பதாவது: ஸ்டார்ட் அப் மஹாகும்ப் என்பது இந்தியாவின் புதுமைக்கான திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு இயக்கம். அப்படிப்பட்ட இந்த நிகழ்வில் முதலீட்டாளர்கள், வணிகர்கள், தொழில்துறை தலைவர்கள் என்று எல்லோரும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
ஸ்டார்ட்அப் மஹாகும்பத்தின் 2ஆம் நாள்:
ஸ்டார்ட் அப் மஹாகும்பத்தின் 2ஆவது நாளான இன்றும் முக்கிய பிரமுகர்கள், முதலீட்டாளர்கள் என்று பலரும் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்வில் முக்கிய விவாதங்கள், உரையாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.