எஸ்கேப் ஆகவே முடியாது! 100% உறுதி! தேர்தல் மோசடி குறித்து ராகுல் காந்தி எச்சரிக்கை
கர்நாடகாவில் தேர்தல் ஆணையம் மோசடிக்குத் துணை போனதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தை கடுமையாக எச்சரித்த அவர், "நீங்கள் தப்ப முடியாது" என்றும் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் மோசடியை அனுமதித்ததா?
கர்நாடகாவில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் தேர்தல் ஆணையம் மோசடி செய்ய அனுமதித்ததற்கான "100% உறுதியான ஆதாரம்" தங்களிடம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை கடுமையாக எச்சரித்த அவர், "நீங்கள் தப்ப முடியாது, நாங்கள் உங்களைத் தேடி வருவோம்" என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் சரியாகச் செய்யவில்லை
தேர்தல் ஆணையம் அதன் பணியை சரியாக செய்யவில்லை என்றும், அது இந்திய தேர்தல் ஆணையமாக செயல்படவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கர்நாடகாவில் ஒரு தொகுதியில் தேர்தல் ஆணையம் மோசடிக்கு துணைபோனதற்கான 100% உறுதியான ஆதாரம் காங்கிரசிடம் இருப்பதாகத் தெரிவித்தார்.
100% உறுதியான ஆதாரம்
"90% அல்ல, அது 100% உறுதியான ஆதாரமாக இருக்கும்" என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். “நாங்கள் ஒரு தொகுதியை மட்டுமே ஆய்வு செய்தோம், அதிலேயே இதைக் கண்டுபிடித்தோம். இதேபோன்ற மோசடிகள் தொகுதிக்குத் தொகுதி நடந்திருக்கலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.
மேலும், "ஆயிரக்கணக்கான புதிய வாக்காளர்கள், 45, 50, 60, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஒரே தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது வாக்காளர் நீக்கம், புதிய வாக்காளர்கள் சேர்க்கை போன்ற பல முறைகேடுகள் நடந்து வருகின்றன. நாங்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்துவிட்டோம்" என்றும் அவர் கூறினார்.
வாக்கு திருட்டு
"நான் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறேன் - நீங்கள் இதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்தால், உங்கள் அதிகாரிகள் தப்பித்துவிடலாம் என்று நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். நீங்கள் தப்ப முடியாது" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்தியாவில் தேர்தல்கள் திருடப்படுகின்றன என்றும், கர்நாடகாவில் ஒரு மக்களவை தொகுதியை ஆய்வு செய்ததன் மூலம் இந்த வாக்கு திருட்டு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை தங்கள் கட்சி கண்டறிந்துள்ளது என்றும் அவர் நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த வாக்கு திருட்டு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை விளக்கி தேர்தல் ஆணையத்திற்கு எழுத்துபூர்வமான அறிக்கையை சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல்
பீகாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது 52 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் முகவரியில் இல்லை என்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களை வாக்களிக்கும் உரிமையிலிருந்து நீக்குவதற்காகவே தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.