- Home
- இந்தியா
- கலவர பூமியில் கால் பதிக்கும் பிரதமர்! மணிப்பூரில் ரூ.8,500 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
கலவர பூமியில் கால் பதிக்கும் பிரதமர்! மணிப்பூரில் ரூ.8,500 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
பிரதமர் மோடி மணிப்பூரில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பணிபுரியும் பெண்கள் விடுதி, பழங்குடியினருக்கான கல்வி மற்றும் மருத்துவ வசதிகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மணிப்பூரில் மோடி
மணிப்பூரில் இன மோதல்களுக்குப் பிறகு முதன்முறையாக நாளை அந்த மாநிலத்திற்குச் செல்ல இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.7,500 கோடி மதிப்பில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் மாநிலத்தின் தலைநகரான இம்பால் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்க இருக்கிறார்.
பெண்களுக்கான விடுதி
பணிபுரியும் பெண்களுக்கான விடுதி: பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பையும், வசதியையும் மேம்படுத்தும் வகையில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதி திட்டம் தொடங்கப்படவுள்ளது.
PM-DevINE திட்டம்: வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் விரைவான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது இந்தத் திட்டம்.
மணிப்பூர் பழங்குடியினருக்கான திட்டங்கள்
ஏகலைவா மாதிரி உண்டுறைப் பள்ளி: பழங்குடியின இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில், ஏகலைவா மாதிரி உண்டுறைப் பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும். இது பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும்.
மலைப்பகுதியில் மருத்துவ வசதி: ஐந்து மலை மாவட்டங்களில் அதிநவீன சிறப்பு மருத்துவ வசதி கொண்ட மையங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும். இது தொலைதூரப் பகுதிகளிலும் சிறந்த மருத்துவ சேவையை உறுதி செய்யும்.
மணிப்பூர் இன்ஃபோடெக் வளர்ச்சித் திட்டம்
வேலைவாய்ப்பு: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் மணிப்பூர் இன்ஃபோடெக் வளர்ச்சித் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இது தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
மணிப்பூர் பவன்: கொல்கத்தா மற்றும் டெல்லியில் அமையவுள்ள மணிப்பூர் பவன்களுக்கு நாளை அடிக்கல் நாட்டப்படும். இது வெளிமாநிலங்களில் வசிக்கும் மணிப்பூர் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
இந்த திட்டங்கள் அனைத்தும், மாநிலத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டவை.
ஐக்கிய நாகா கவுன்சிலின் போராட்டம் வாபஸ்:
மணிப்பூரின் முக்கிய விநியோக வழித்தடமான தேசிய நெடுஞ்சாலை-2-இல் மேற்கொண்ட ஒரு வார கால பொருளாதாரத் தடையை ஐக்கிய நாகா கவுன்சில் (UNC) தற்காலிகமாக நீக்கிக்கொண்டது. இந்தியா-மியான்மர் தடையற்ற போக்குவரத்து விதிமுறை மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தத் தடை விதிக்கப்பட்டது.
எல்லைப் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்பு மத்திய அரசு அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசனை செய்யும் என்று மணிப்பூர் தலைமைச் செயலாளர் புனீத் குமார் கோயல் அளித்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாநிலத்தில் இயல்பு நிலையை மீண்டும் கொண்டு வருவதில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.