செம காண்டில் இருக்கும் விமானிகள்! வெளிநாட்டு மீடியாக்கள் மீது கடும் பாய்ச்சல்!
ஏர் இந்தியா விபத்துக்கு விமானிதான் காரணம் என்று செய்தி வெளியிட்டதற்காக வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ராய்ட்டர்ஸ் மீது இந்திய விமானிகள் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இரு நிறுவனங்களும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

இந்திய விமானிகள் கூட்டமைப்பின் நடவடிக்கை
ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி செய்த தவறுதான் காரணம் என செய்தி வெளியிட்ட தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) மற்றும் ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனங்கள் மீது இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக இரு செய்தி நிறுவனங்களும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
ராய்ட்டர்ஸ் மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு நோட்டீஸ்
இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்திய இந்திய விமானிகள் கூட்டமைப்பின் தலைவர் சி. எஸ். ரந்தாவா, ஏ.என்.ஐ (ANI) செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் ராய்ட்டர்ஸ் நிறுவனங்களின் அறிக்கைகள் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு, மன்னிப்பு கேட்கும்படி கோரப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
ராய்ட்டர்ஸ் மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு எஃப்.பி.ஐ. இது தொடர்பாக மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. "சர்வதேச ஊடகங்களின் சில சரிபார்க்கப்படாத அறிக்கைகள் மூலம் முடிவுகளை எடுக்க முயற்சிப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. விமனான விபத்து குறித்து விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது இத்தகைய செயல்கள் பொறுப்பற்றவை” என அதில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ அறிக்கை இல்லை
"விபத்து அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தாலும், இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பைப் பற்றி பொதுமக்களிடையே பதட்டத்தையோ அல்லது கோபத்தையோ உருவாக்குவதற்கான நேரம் இதுவல்ல" என்றும் விமானிகள் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) மேற்கொண்டு வரும் விசாரணையையும் விமானிகள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. "விபத்தின் காரணம் குறித்து அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தும் இறுதி அறிக்கை கிடைக்காத நிலையில், தவறான செய்தியைப் பரப்பும் வகையிலும், உயிரிழந்த விமானிகள் உள்பட தனிநபர்கள்மீது குற்றம் சாட்டும் வகையிலும் அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்துங்கள்" என்று விமானிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மிகவும் பொறுப்பற்ற செயல்
அத்தகைய உள்ளடக்கங்களை வெளியிடுவது மிகவும் பொறுப்பற்ற செயல் எனச் சாடியுள்ள கூட்டமைப்பு, வெளியாகியுள்ள தவறான அறிக்கைகள் உயிரிழந்த விமானிகளின் நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு விளைவித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் அறிக்கை துயரமடைந்த குடும்பங்களுக்கு மேலும் தேவையற்ற துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கவலை தெரிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து தளங்களுக்கும் சரிபார்க்கப்படாத அல்லது அதிகாரப்பூர்வமற்ற செய்திகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க அமைப்பின் கண்டனம்
அமெரிக்கவைச் சேர்ந்த தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB), அந்நாட்டில் நடைபெறும் விமான விபத்துக்கள் மற்றும் குறிப்பிடத்தக்க போக்குவரத்து நிகழ்வுகளை விசாரணை செய்யும் அமைப்பாகும். இந்த அமைப்பு வெள்ளிக்கிழமை, ஏர் இந்தியா விமான விபத்து குறித்த ஆரம்பக் கட்ட புலனாய்வு அறிக்கை தொடர்பாக வெளியான ஊடகச் செய்திகளைக் கடுமையாக கண்டித்துள்ளது.
"ஏர் இந்தியா விமான விபத்து குறித்த சமீபத்திய ஊடக அறிக்கைகள் ஊகத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தனது ஆரம்ப அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுபோன்ற விசாரணைகளுக்கு நேரம் எடுக்கும். வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஏ.ஏ.ஐ.பி (AAIB) வெளியிட்ட பொது வேண்டுகோளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம், விசாரணைக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்” என என்.டி.எஸ்.பி (NTSB) தலைவர் ஜெனிஃபர் ஹோமெண்டி கூறியுள்ளார்.