அமித்ஷா இப்படி செய்துட்டாரே.! ரொம்ப வருத்தமாக இருக்கு- ஓ.பன்னீர் செல்வம்
அதிமுகவில் அதிகார மோதல் காரணமாகப் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது குறித்து தொண்டர்களின் கருத்துக் கேட்கப்படும் என்றும், பாஜக கூட்டணி குறித்தும் ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் அதிகார மோதல் காரணமாக பல பிளவுகளாக கட்சி பிரிந்துள்ளது. இதன் காரணமாக தேர்தல் களத்தில் வாக்குகள் பிரிந்து தோல்வியை பெறும் நிலையில் அதிமுக உள்ளது. இந்த நிலையில் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என அதிமுகவினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக- அதிமுக கூட்டணி பிரிந்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் டிடிவியோடு கூட்டணி அமைத்து பாஜக தேர்தலில் போட்டியிட்டது. தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக, ஓபிஎஸ் மற்றும் டிடிவியை கை விட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இண்டு நாட்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம்.
இந்த நிலையில் தொண்டர்களின் கருத்தைக் கேட்கும் பொருட்டு மாவட்டம் தோறும் பயணம் செய்து மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை பெற்று தேர்தல் நிலைப்பாடு குறித்து நல்ல முடிவை அறிவிப்போம் என்றார்
மாவட்ட செயலாளர்கள் மூத்த நிர்வாகிகளின் கருத்துக்களை மட்டுமே இன்றைய கூட்டத்தில் பதிவு செய்துள்ளோம் என்றும் தெரிவித்தார். மேலும் மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எந்த மாதிரி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம் என கூறினார்.
பிரிந்து இருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்களுடன் நிலைப்பாடு என்றும் என்னைப் பொறுத்தவரையும் மறைமுக பேச்சுவார்த்தை யாரிடமும் கிடையாது என தெரிவித்தார்.
அமித்ஷா சென்னை வந்தபோது என்னை அழைக்காததும், என் டி ஏ கூட்டணியில் எங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார். எப்பவும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொன்ன எடப்பாடி இன்று பாஜகவுடன் கூட்டணியில் இணைந்து இருக்கிறார். அதுபோல எங்களுடன் இனைய மாட்டோம் என்று சொல்பவர்கள் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது
அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்பதை, காற்றில் பறக்க விட்டு விட்டார்கள். நான் கையெழுத்துயிட்ட பிறகு தான் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய நபர்கள், சட்டமன்ற உறுப்பினராக மாறினார்கள் என்றும் தெரிவித்தார். மற்ற நபர்களை சந்தித்தவர்களே மர்மத்தை சொல்லாமல் இருக்கிறார்கள் , நான் மட்டும் எப்படி சொல்வது, அது அரசியல் தர்மமா? என்று கேள்வி எழுப்பிய அவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க, நான் நேரம் இன்னும் கேட்கவில்லை என்றும் கூறினார்