- Home
- இந்தியா
- நிமிஷாவுக்கு மன்னிப்பில்லை.! இரத்தப்பணமும் வேண்டாம்- கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி-நடப்பது என்ன.?
நிமிஷாவுக்கு மன்னிப்பில்லை.! இரத்தப்பணமும் வேண்டாம்- கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி-நடப்பது என்ன.?
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா பிரியாவை மீட்கும் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. கொல்லப்பட்டவரின் சகோதரர் மன்னிக்க மறுப்பு, இரத்தப்பணம் வேண்டாம் எனக் கூறியதாக தகவல்.

ஏமன் சிறையில் நிமிஷா பிரியா
ஏமன் நாட்டை சேர்ந்த தலால் அப்டு மகதியை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு நிமிஷா பிரியா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், காந்தபுரம் முஸ்லியாரின் தலைமையில் யேமன் மதகுருமார்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் நீதிமன்றம் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்த சூழ்நிலையில் ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா பிரியாவை மீட்கும் முயற்சிகளுக்கு பின்னடைவாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட தலாலின் சகோதரரின் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். நிமிஷா பிரியாவை மன்னிக்க மாட்டேன் என்ற கடுமையான நிலைப்பாட்டில் தலாலின் சகோதரர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்றும், இரத்தப்பணம் வேண்டாம் என்றும் தலாலின் சகோதரர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தூக்கு தண்டனை அறிவிப்பால் அதிர்ச்சி
அதே நேரம் குடும்பத்தில் உள்ள மற்ற பலரும் நிமிஷா பிரியாவை மன்னிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உறவினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் கூறப்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் மேலும் பேச்சுவார்த்தை தேவைப்படும் என்று பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
கொலைசெய்யப்படவரின் சகோதரர் உட்பட அவர்களது குடும்பத்தினரை சமாதானப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமரச முயற்சிகள் தொடரும் என்று மத்திய அரசும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வெளியுறவு அமைச்சகம் எந்த பொது அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. தேவையற்ற சர்ச்சைகள் விடுதலை முயற்சிகளை பாதிக்கும் என்பதால் இந்த தகவலை தெரிவித்துள்ளது. நேற்று நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிமிஷா பிரியாவை மீட்க போராட்டம்
அடுத்த அறிவிப்பு வரும் வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்பது தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. நிமிஷா பிரியா விவகாரத்தில் தொடர்ந்து தலையிடுவோம் என்று காந்தபுரம் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினருடன் இரத்தப்பணம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில் முடிவு எடுக்கப்படும் வரை மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மரண தண்டனையை நிறுத்தி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிமிஷா பிரியாவை மீட்க முயற்சி
சையத் உமர் ஹஃபீஸ் என்ற யேமன் சுன்னி மதகுரு மூலம் கொல்லப்பட்டவரின் உறவினர்களுடன் பேச நிமிஷா பிரியா விடுதலைக்குழுவுக்கு வாய்ப்பு கிடைத்தது. வரும் நாட்களில் கூடுதல் பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியாரின் உதவியாளர்கள் தெரிவித்தனர்.
தலாலின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாமல் சட்ட உதவிக்குழு தவித்து வந்தது. தலாலின் சகோதரருடன் பேச முடிந்ததில் நம்பிக்கை பிறந்துள்ளதாகவும், பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் காந்தபுரம் தரப்பு தெரிவித்துள்ளது.