நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது ED குற்றப்பத்திரிகை தாக்கல்
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான பணமோசடி வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் மற்றும் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு இடையேயான நிதி முறைகேடுகள் தொடர்பான இந்த வழக்கில் ரூ. 661 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

National Herald Case Chargesheet
நேஷனல் ஹெரால்டு வழக்கு:
நேஷனல் ஹெரால்டு (National Herald) பத்திரிகை தொடர்பான பணமோசடி (Money Laundering) வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் அயலகப் பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடாவும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
National Herald Case
பணமோசடி தடுப்புச் சட்டம்:
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் தகவல்படி, 2002 பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவுகள் 44 மற்றும் 45ன் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) மற்றும் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் (YIL) ஆகியவற்றுக்கு இடையேயான நிதி முறைகேடுகளை மையமாகக் கொண்டுள்ளது. காந்தி குடும்பத்தினர் YIL நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குதாரர்களாக உள்ளனர்.
National Herald case
சுப்பிரமணியன் சுவாமி:
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் 2014ஆம் ஆண்டு புகாரின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமலாக்கத்துறை விசாரணையானது, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெடுக்குச் சொந்தமான ரூ.2,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை மோசடி செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. யங் இந்தியன் நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை முறைகேடான வழியில் கையகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
National Herald Case
ரூ.661 கோடி அசையா சொத்துக்கள்:
சென்ற ஏப்ரல் 12ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக ரூ.661 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை கையகப்படுத்த அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. டெல்லியில் உள்ள ஹெரால்டு ஹவுஸ், மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள ஒரு கட்டிடம் மற்றும் லக்னோவில் உள்ள மற்றொரு கட்டிடம் ஆகியவை அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தச் சொத்துக்கள் முன்னர் நவம்பர் 2023 இல் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டன.
National Herald Case
சொத்துக்களை கையகப்படுத்துவதில் சதி:
யங் இந்தியன் நிறுவனத்தின் மூலம் அசோசியேட் ஜர்னல்ஸின் சொத்துக்களை கையகப்படுத்துவதில் காந்தி குடும்பத்தினர் குற்றச் சதி மற்றும் நிதி மோசடி செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. போலி நன்கொடைகள், போலியான முன்பணம் மற்றும் போலி விளம்பரங்கள் மூலமாக கூடுதல் வருமானம் ஈட்ட YIL மற்றும் AJL சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை கூறுகிறது.
Congress vs ED
காங்கிரஸ் மறுப்பு:
அமலாக்கத்துறையால் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள காங்கிரஸ் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை மீட்டெடுப்பதற்கான திட்டத்தில் எந்தத் தவறும் செய்யவில்லை என வாதிடுகிறது. இந்த வழக்கு விசாரணையை சிறுமையான பழிவாங்கும் தந்திரம் என்று காங்கிரஸ் விமர்சிக்கிறது. அமலாக்கத்துறை பாஜகவின் கூட்டணியிலேயே இணைந்துவிட்டது என்றும் காங்கிரஸ் சாடுகிறது.