நாத்வாரா கோயிலில் அம்பானி தரிசனம்! ரூ.15 கோடி நன்கொடை.. ரூ.50 கோடி சேவை மையம்!
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ராஜஸ்தான் நாத்வாரா ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்தார். அவர் ஆலயத்திற்கு ரூ.15 கோடி நன்கொடை வழங்கியதுடன், பக்தர்களுக்காக ரூ.50 கோடியில் நவீன சேவை மையம் ஒன்றை அமைப்பதாகவும் உறுதியளித்தார்.

முகேஷ் அம்பானி தரிசனம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கியப் புண்ணியத் தலமான நாத்வாராவிற்குச் சென்று தரிசனம் செய்தார். குரு ஸ்ரீ விஷால் பாவா சாஹேபிடம் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.
நாத்வாராவில் நவீன வசதிகளுடன் பக்தர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேவை மையம் ஒன்றை அமைப்பதாக அம்பானி உறுதி அளித்துள்ளார். மேலும், ஸ்ரீ நாத்வாரா ஆலயத்திற்கு ரூ.15 கோடி நன்கொடையையும் வழங்கினார்.
ரூ.50 கோடியில் புதிய சேவை மையம்
சுமார் ரூ.50 கோடி மதிப்பில் அமையவுள்ள இந்த புதிய மையம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்டிருக்கும். இது வைஷ்ணவ மூத்த குடிமக்கள் மற்றும் வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் கண்ணியமான தங்குமிடத்தை வழங்கும்.
24 மணிநேர மருத்துவப் பிரிவு, செவிலியர் மற்றும் பிசியோதெரபி சேவைகள் இதில் இடம்பெறும். ஆன்மிகச் சொற்பொழிவு செய்வதற்கான பெரிய மண்டபம் அமைக்கப்படும். புஷ்டிமார்க்க மரபின் அடிப்படையில் பாரம்பரிய உணவகம் உருவாக்கப்படும்.
நாத்வாராவுக்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும் சேவை செய்யவேண்டும் என்பது அனந்த் அம்பானியின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பானி பேச்சு
தரிசனத்துக்குப் பிறகு அம்பானி பேசுகையில், “இந்து சனாதன தர்மம் மற்றும் புனித ஆச்சாரிய மரபைப் பின்பற்றுவதில் வைஷ்ணவர்களாகிய நாம் பெருமை கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
விஷால் பாவா சாஹேப் அவர்கள், அனந்த் அம்பானியின் 'வந்தாரா' என்ற தொலைநோக்குத் திட்டத்தைப் பாராட்டியதாகவும் அம்பானி குறிப்பிட்டார்.