மோடியின் இளமைக் காலம்... மாணவர்களுக்காக ரீ-ரிலிஸ் ஆகும் தேசிய விருது படம்!
பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இளமைக்கால சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய விருது பெற்ற 'சலோ ஜீதே ஹைன்' திரைப்படம் மீண்டும் திரையிடப்படுகிறது.

மோடி 75வது பிறந்தநாள்
தேசிய விருது வென்ற 'சலோ ஜீதே ஹைன்' திரைப்படம், நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் திரையரங்குகளில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை மீண்டும் திரையிடப்பட உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"மற்றவர்களுக்காக வாழ்பவர்களே உண்மையாக வாழ்கிறார்கள்" என்ற சுவாமி விவேகானந்தரின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், பிரதமர் நரேந்திர மோடியின் குழந்தைப் பருவத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த திரைப்படம், 'நரு' என்ற இளம் சிறுவன், சுவாமி விவேகானந்தரின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு, தனது சிறிய உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை விவரிக்கிறது.
'சேவா கா சம்மான்' திட்டம்
இந்த மறுவெளியீட்டைக் குறிக்கும் வகையில், 'சலோ ஜீதே ஹைன்: சேவா கா சம்மான்' (சேவையின் மரியாதை) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் சமூகத்தின் நிஜ ஹீரோக்களான காவலாளிகள், துப்புரவு பணியாளர்கள், ஓட்டுநர்கள், பியூன்கள் போன்ற பணியாளர்கள் கெளரவிக்கப்படுவார்கள்.
மாணவர்கள் இந்த ஹீரோக்களுடன் இணைந்து படத்தைப் பார்த்த பிறகு, அவர்களை கௌரவிக்கும் விழாக்கள் நடைபெறும். இது, இளம் மனங்களில் தன்னலமற்ற சேவை மற்றும் பிறருக்காக வாழும் எண்ணத்தை ஊக்குவிக்கும் என்று அமைச்சகத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தேசிய விருதும், தயாரிப்பாளரின் கருத்தும்
படத்தின் தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் கூறுகையில், "இந்த இயக்கம் ஒரு ஆழமான சக்திவாய்ந்த செய்தியை கொண்டு செல்கிறது. இது லட்சக்கணக்கான இளம் மனங்களில் ஒவ்வொரு பணியையும், ஒவ்வொரு தனிமனிதனையும் மதிக்கும் எண்ணத்தை ஊக்குவிக்கும். இது தன்னலமற்ற தன்மை, பச்சாதாபம் மற்றும் தேசத்திற்கான கடமை போன்ற காலமற்ற மதிப்புகளை வலுப்படுத்துகிறது - இது நமது பிரதமருக்கு ஒரு உண்மையான மரியாதை" என்றார்.
மங்கேஷ் ஹடவாலே இயக்கிய இந்தப் படம், ஆனந்த் எல். ராய் மற்றும் மகாவீர் ஜெயின் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. மற்றவர்களுக்காக வாழும் அதன் செய்தி, முதன்முதலில் வெளியானபோது இருந்ததை போலவே இன்றும் பொருத்தமானதாக உள்ளது. தற்போது, இந்த சிறப்பு ரீ-ரிலீஸ், பிரதமரின் உத்வேகமான வாழ்க்கை மற்றும் தத்துவத்திற்கு ஒரு அஞ்சலியாக, அந்த செய்தியை மேலும் கொண்டு செல்ல முயல்கிறது.