- Home
- இந்தியா
- மொத்தமாக கொட்டிய கனமழை.. அடித்து செல்லப்பட்ட பாலங்கள்.. மண்ணுக்குள் புதைந்து 17 பேர் பலியான சோகம்!
மொத்தமாக கொட்டிய கனமழை.. அடித்து செல்லப்பட்ட பாலங்கள்.. மண்ணுக்குள் புதைந்து 17 பேர் பலியான சோகம்!
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அங்குள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் கனமழை
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது டார்ஜிலிங்கில் நேற்று இரவு பெய்த கனமழையால் மிரிக் மற்றும் சுகியா போக்காரி போன்ற பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பெரிய பாலம் ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் சிலர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினரும், உள்ளூர் நிர்வாகமும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நிலச்சரிவுக்கு 17 பேர் பலி
ஆனால் 17 பேர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துர்கா பூஜையை தொடர்ந்து கொல்கத்தா மற்றும் வங்காளத்தின் பிற பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் டார்ஜிலிங்கிற்குப் பயணம் மேற்கொள்வதால், பலர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
போக்குவரத்து முடங்கியது
நிலச்சரிவுகளால் வங்காளத்தையும் சிக்கிமையும் இணைக்கும் சாலை மற்றும் டார்ஜிலிங்கைச் சிலிகுரியுடன் இணைக்கும் சாலை சேதமடைந்து போக்குவரத்து முடங்கியுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக டார்ஜிலிங் உள்பட மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சுற்றுலா தலங்கள் மூடல்
டைகர் ஹில் மற்றும் ராக் கார்டன் என டார்ஜிலிங்கில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி, சிலிகுரி மற்றும் கூச் பெஹார் ஆகிய பகுதிகளும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டார்ஜிலிங் உள்பட மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களில் வரும் 7ம் தேதி அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
டார்ஜிலிங் எம்.பி. சொல்வது என்ன?
''கனமழை மற்றும் நிலச்சரிவாஅல் உயிரிழப்புகள், சொத்து இழப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நான் நிலைமையை ஆராய்ந்து வருகிறேன், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்" என்று டார்ஜிலிங் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜு பிஸ்தா தெரிவித்துள்ளார்.