நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை ரத்து.? நடந்தது என்ன.?
ஏமனில் சிறையில் உள்ள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இரத்தப்பணம் தொடர்பான விஷயத்தில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை,

செவிலியர் நிமிஷா பிரியா உயிர் போராட்டம்
ஏமன் சிறையில் உள்ள கேரளாவை சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், இது தொடர்பாக ஏமனில் இருந்து உறுதிப்படுத்தல் கிடைத்ததாகவும் ஏமனில் உள்ள சூஃபி அறிஞரின் சீடர் ஜவத் முஸ்தபா தெரிவித்தார். கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா, கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு வேலைக்கு சென்றார். போதிய வருவாய் இல்லாததால், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக கிளினிக் ஆரம்பித்தார்.
செவிலியர் நிமிஷா பிரியாவிடம் இருந்து, முழுமையாக கிளினிக்கை அபகரிக்க மஹ்தி முற்பட்டுள்ளார். மேலும் பிரியாவின் பாஸ்போர்ட்டையும் மஹ்தி பறித்துள்ளார். இதனால் அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டை எடுக்க மயக்க மருந்தை பிரியா கொடுத்துள்ளார். மயக்க மருந்து அதிகமாக செலுத்தியதால் மஹதி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட பிரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பிரியாவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்து.
நிமிஷா பிரியாவிற்கு தூக்கு தண்டனை
கடந்த 14ஆம் தேதி தூக்கு தண்டனைக்கு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு, மரண தண்டனையை ரத்து செய்வது உட்பட ஏமனில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. அதன் ஒரு பகுதியாகவே மரண தண்டனை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஜவத் முஸ்தபா தெரிவித்தார்.
மரண தண்டனை ரத்து செய்யப்படவும், தொடர் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் பிற விஷயங்களில் முடிவெடுக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக காந்தபுரத்தின் அலுவலகம் நேற்று இரவு தெரிவித்தது. இதற்கிடையில், மரண தண்டனை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு உறுதிப்படுத்தவில்லை. கூடுதல் தகவல்கள் கிடைத்த பிறகு பதிலளிக்கலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான செய்தி தவறானது என்று ஏமனில் உள்ள சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார்.
நிமிஷாவை விடுவிக்க மறுப்பு தெரிவிக்கும் சகோதரர்
ஏமன் அறிஞர்கள் குழு தவிர, வடக்கு ஏமனின் ஆட்சியாளர்களும், சர்வதேச தூதரக அதிகாரிகளும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இரத்தப்பணம் தொடர்பான விஷயத்தில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை என்றும், யாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பதை காந்தபுரம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கொல்லப்பட்ட ஏமன் குடிமகன் தலாலின் சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏமனில் பிரியாவின் கணவர், மகள்
இதற்கிடையில், நிமிஷா பிரியாவின் விடுதலைக்காக அவரது கணவரும் மகள் மிஷேலும் ஏமனுக்கு வந்துள்ளதாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஏமனில் இருந்து இவர்களுடன் டாக்டர் கே.ஏ.பால் என்ற சுவிசேஷகர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் விடுவிக்கப்படுவார் என்றும் அறிவித்தவர், குளோபல் பீஸ் இனிஷியேட்டிவ் என்ற அமைப்பின் நிறுவனர் கே.ஏ.பால். இதன் பின்னரே, எதிர்பாராத விதமாக நிமிஷா பிரியாவின் கணவர் மற்றும் மகள் மிஷேலுடன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அப்துல் மாலிக் ஹூதி என்ற ஹூதி தலைவருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளே இந்த வீடியோ. உலக அமைதி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தொடங்குகிறது. நிமிஷாவை விடுவித்ததற்காக ஏமன் தலைவர்களுக்கும், அரசுக்கும் வீடியோவில் நன்றி தெரிவிக்கப்படுகிறது. நிமிஷா சில நாட்களில் விடுவிக்கப்படுவார் என்று நம்புவதாகவும், அனைவருக்கும் நன்றி என்றும், நிமிஷா பிரியா இந்தியாவின் மகள் என்றும் வீடியோவில் கூறப்படுகிறது.