இஸ்ரோவின் புதிய மைல்கல்! விண்வெளி வீரர்களை பத்திரமாக தரையிறக்கும் சோதனை வெற்றி!
இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் ஒரு அங்கமாக விண்வெளி வீரர்கள் தரையிறங்கும் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 2027-க்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இலக்கை நோக்கி இஸ்ரோ முன்னேறி வருகிறது.

விண்வெளி வீரர்கள் தரையிறங்குவதற்கான சோதனை
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் லட்சியத் திட்டமான ககன்யான் திட்டத்தின் முக்கிய அங்கமான விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான பாராசூட் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தி, விண்வெளிப் பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது.
ககன்யான் திட்டத்தின் நோக்கம்
2027-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, விண்வெளி வீரர்கள் ஒரு வார காலத்திற்கு விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அதன் பிறகு, அவர்கள் பாதுகாப்பாக விண்கலத்தின் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள்.
மனிதர்கள் செல்வதற்கு முன், இஸ்ரோ மூன்று முறை ஆளில்லா விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பி, அவை பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவதை சோதிக்க உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் முதல் ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்படும்.
பாராசூட் சோதனை
விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக இஸ்ரோ பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விண்கலம் கடலில் தரையிறங்கும் மற்றும் மீட்டெடுக்கும் செயல்முறையைச் சோதிக்கும் வகையில் இந்த பாராசூட் சோதனை நடத்தப்பட்டது.
இஸ்ரோ, இந்திய விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ), இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த வெற்றி, ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய படிநிலையாகக் கருதப்படுகிறது.