சென்னை டூ டெல்லி.. இண்டிகோ விமானங்கள் திடீர் ரத்து.. டென்ஷன் ஆன பயணிகள்
இண்டிகோ நிறுவனம் வானிலை, தொழில்நுட்ப கோளாறு மற்றும் பணியாளர் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. இதனால் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இண்டிகோ விமானங்கள் ரத்து
இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் ஒன்றான இண்டிகோ தற்போது கடும் பிரச்சினையில் சிக்கியுள்ளது. வானிலை சிக்கல்கள், தொழில்நுட்ப கோளாறுகள், பணியாளர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் பல்வேறு விமான நிலையங்களில் பயண சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்படுகின்றன. இன்று மட்டும் நாட்டின் 8 நகரங்களில் 100-க்கும் மேற்பட்ட பறப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் 200-க்கும் அதிகமான விமானங்கள் பறக்காமல் போனது என்ற அதிகாரப்பூர்வ தகவல் கூறுகிறது.
இண்டிகோ விளக்கம்
இண்டிகோ சேவைகள் ரத்து காரணமாக பெங்களூரு, டெல்லி, அஹமதாபாத், ஹைதராபாத், சூரத், கொல்கத்தா, சென்னை ஆகிய விமான நிலையங்களில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் காத்திருத்து விமான பயணிகள் வெறுப்படைந்துள்ளனர். இதுகுறித்து அளித்துள்ள விளக்கத்தில் “மோசமான வானிலை, தொழில்நுட்ப சிக்கல், புதிய பணியாளர் விதிமுறைகள் எல்லாம் சேர்ந்து சேவைகளை பாதித்துள்ளன. அடுத்த 48 மணி நேரத்தில் சேவைகள் சீராகும்” என இண்டிகோ அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் 42, டெல்லியில் 38, அஹமதாபாத்தில் 25, ஹைதராபாத்தில் 19, சூரத்தில் 8 மற்றும்கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான சேவைகள் ரத்து
சில தகவல்கள் சிஸ்டம் பழுதுகள் மற்றும் பணியாளர் தட்டுப்பாடே காரணம் என சொல்கின்றன. ஆனால் இந்திய விமானிகளின் கூட்டமைப்பு (FIP) இந்த கருத்தை மறுக்கிறது. நிறுவனத்தின் நீண்டகால கொள்கைகளே காரணம்; பல ஆண்டுகளாக குறைவான விமானங்களை வேலைக்கு எடுத்ததால்தான் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டது என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதிய DGCA விதிகள் பாதிப்பா?
சமீபத்தில் DGCA விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதால் பைலட்டுகளுக்கான ஓய்வு நேரம் வாரத்திற்கு 36 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பைலட் உடல்நலக் கண்காணிப்பு, மூன்று மாதத்திற்கு ஒருமுறை களைப்பு அறிக்கை சமர்ப்பித்தல் போன்றவை கட்டாயமாகியுள்ளது. புதிய விதிமுறைகளை அனுசரிப்பதற்கு அதிக பணியாளர்கள் தேவைப்படுவதாலேயே சேவை சீர்குலைந்ததாக விமான சேவை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

