விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீண்ட ஸ்கைவாக் கண்ணாடி பாலம்!
விசாகப்பட்டினம் கைலாசகிரி மலை உச்சியில், இந்தியாவின் மிக நீளமான கண்ணாடிப் பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் திறன் கொண்டது.

விசாகப்பட்டினம் கண்ணாடிப் பாலம்
விசாகப்பட்டினத்தில் கைலாசகிரி மலை உச்சியில் இந்தியாவிலேயே மிகவும் நீளமான கண்ணாடிப் பாலம் (Cantilever Glass Skywalk Bridge) திங்கட்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் எம்.பி. எம். ஸ்ரீபராத், மேயர் பி. ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் எம்.எல்.ஏ வேலகுடி ராமகிருஷ்ண பாபு மற்றும் விசாகப்பட்டினம் பெருநகரப் பிராந்திய வளர்ச்சி ஆணையத்தின் (VMRDA) தலைவர் பிரணவ் கோபால் ஆகியோர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் மிக நீளமான கண்ணாடிப் பாலம்
இந்த ஸ்கைவாக் பாலம் தரைமட்டத்திலிருந்து சுமார் 862 அடி (தோராயமாக 262 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இது விசாகப்பட்டினம் நகரம் மற்றும் வங்காள விரிகுடாவின் விரிவான கண்கவர் காட்சிகளைப் பார்க்க உதவுகிறது.
முன்பு விசாகப்பட்டினத்தைத் தாக்கிய ஹுட்ஹுட் போன்ற கடுமையான சூறாவளிகளைக் கருத்தில் கொண்டு, இந்தப் பாலம் மணிக்கு 250 கி.மீ. வரையிலான காற்றின் வேகத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உறுதியான, உயர் வலிமை கொண்ட கண்ணாடிகள் மூலம் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், அதிவேக காற்று வீசும்போதும் சேதமடையாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
🌉✨ VIZAG IS ABOUT TO TOUCH THE SKY!
🚨 India’s LONGEST Glass Bridge opens on December 1 at Kailasagiri and it looks absolutely stunning! 😍🔥
👣 Walk above the city on a crystal-clear glass deck
🌊 Soak in the Bay of Bengal from a whole new angle
🌆 Skyline views that will… pic.twitter.com/EMtj8A380k— Andhra Community (@AndhraCommunity) November 30, 2025
கண்ணாடி பாலத்தின் தாங்கும் திறன்
இந்தப் பாலம் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோரைத் தாங்கும் திறன் கொண்டது. இருந்தாலும் பாதுகாப்பு மற்றும் நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், ஒரே நேரத்தில் 40 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் எட்டு மாதங்களில் இந்தத் திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. VMRDA தலைவர் பிரணவ் கோபால் இது குறித்துப் பேசுகையில், "இந்த வடிவமைப்பு சுற்றியுள்ள மலைகள் மற்றும் கடலின் தனித்துவமான காட்சிகளைக் கண்டுகளிக்கும் வாய்ப்பைத் தருகிறது. இது சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக அமையும். விசாகப்பட்டினத்தில் சுற்றுலாக் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

