NEET தோல்வியில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் வேலை வரை! ரிதுபர்ணாவின் சாதனை!
நீட் தேர்வில் தோல்வியடைந்த ரிதுபர்ணா, ரோபோட்டிக்ஸ் துறையில் சாதித்து ரோல்ஸ் ராய்ஸில் ரூ.72 லட்சம் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். பொறியியல் படிப்பிற்கு மாறியது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ரிதுபர்ணாவின் வெற்றிப் பயணம்
சில ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வு அறை வாசலில் இருந்து வெளியே வந்தபோது, 20 வயதான ரிதுபர்ணா கே.எஸ். தனது கனவுகள் சுவரில் மோதியதாகவே கருதினார். ஆனால் இன்று, அவர் பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஜெட் என்ஜின் உற்பத்திப் பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
ஆண்டிற்கு கண்ணைக் கவரும் ₹72.2 லட்சம் சம்பளத்துடன், அந்த நிறுவனத்தின் இளைய பெண் பணியாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்று டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.
திருப்புமுனை ஏற்படுத்திய முடிவு
ரிதுபர்ணா நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்குத் தகுதி பெறத் தவறிய அவர், சில காலம் யு.பி.எஸ்.சி. தேர்வுக்காகப் படித்து வந்தார். ஆனால் பின்னர் தனது தந்தையின் அறிவுரையின் பேரில், பொறியியல் துறைக்க மாறினார். இந்த முடிவு, அவரது சிறப்பான எதிர்காலத்திற்கு அடித்தளத்தை அமைத்தது.
அவர் சென்னை அடையாறில் உள்ள சஹ்யாத்ரி பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் (SCEM) ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் படிப்பில் சேர்ந்தார். அப்போது தானியங்கி அமைப்புகள் (automation) மற்றும் இயந்திர வடிவமைப்பு (machine design) மீதான அவரது ஆர்வம் அதிகரித்தது. அவரது ஆர்வம் விரைவில் இந்தத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியமாக மாறியது.
விவசாயிகளுக்கு உதவும் ரோபோ
ஒரு நண்பருடன் இணைந்து, பாக்கு மரங்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கவும் அறுவடை செய்யவும் பயன்படும் ரோபோவை உருவாக்கினார். கோவாவில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டை ஒட்டி நடந்த போட்டியில், ரிதுபர்ணாவின் ரோபோ திட்டத்துக்கு பதக்கங்கள் கிடைத்தன. சிங்கப்பூர், ஜப்பான், சீனா, ரஷ்யா என பல நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் போட்டியிட்டு இந்த வெற்றியைப் பெற்றார்.
அவரது கல்வியறிவு மற்றும் நடைமுறை அனுபவத்தின் மூலம் பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸில் பயிற்சிப் பணியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.
ரூ.72 லட்சம் சம்பளம்
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருப்பதை அவரால் நம்பவே முடியவில்லை.. இந்த வாய்ப்பு உறுதியாகும்வரை தன் பெற்றோரிடம்கூடச் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார்.
பயிற்சிப் பணியில் சேர்ந்ததும் ஆரம்பத்தில் ரூ.39.58 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது. பின்னர், பணியில் அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ரூ.72.2 லட்சம் சம்பள பேக்கேஜுடன் வேலை கிடைத்துள்ளது.