காசிக்குப் போய் கங்கையில் நீராட விருப்பமா? ரயில்வே இயக்கும் சிறப்பு ரயிலில் போகலாம்! முழு விவரம்
தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை மேற்கொள்வதற்காக தென்காசியில் இருந்து வாராணாசிக்கு பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்குவதாக அறிவித்துள்ளது.
நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஆன்மிக தலங்களுக்கு பொதுமக்கள் எளிதாக சென்றுவர உதவும் வகையில் இந்திய ரயில்வே பாரத் கௌரவ் ரயில்களை 2021ஆம் ஆண்டு முதல் இயக்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இருந்து கயா, ஷீரடி, காசி, வாரணாசி போன்ற இடங்களுக்கு பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஒரு தடவையாவது காசிக்கு யாத்திரை செல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு உதவ வரும் தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுகிறது. தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை என்ற பெயரில் இயக்கப்படும் இந்த ரயில் நவம்பர் 9ஆம் தேதி தென்காசியில் இருந்து புறப்படும். மதியம் 3.50 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை வந்தடையும்.
பின், மறுநாளில் விஜயவாடா, வாரங்கல், பல்கர்ஷா ரயில் நிலையங்களைக் கடந்து, நவம்பர் 11ஆம் தேதி பிரயாக்ராஜ் சங்கம் வழியாக இரவு 10.30 மணிக்கு வாரணாசி சென்றடையும். மறுமாரக்கமாக நவம்பர் 13ஆம் தேதி இரவு 11:00 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்படும் பாரத் கௌரவ் ரயில் கயா, சம்பல்பூர், விஜயவாடா, சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, சிதம்பரம், தஞ்சாவூர், மண்டபம் (ராமேஸ்வரம்) வழியாக தென்காசியை அடையும்.
ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.16,850 கட்டணம் வசூலிக்கப்படும். ஏ.சி. பெட்டியில் பயணிக்க வேண்டும் என்றால் ஒரு நபருக்கு ரூ.30,500 கட்டணம் பெறப்படும். 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்தக் கட்டணம் ரூ.15,850 மற்றும் ரூ.29,100 ஆகக் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தீபாவளி கங்கா ஸ்னான யாத்திரை மூலம் பிரயாக்ராஜ், வாரணாசி (காசி), கயா மற்றும் ராமேஸ்வரம் ஆகிய ஆன்மீகத் தலங்களுக்குச் சென்றுவர முடியும். இந்த ரயிலில் 3 டியர் குளிர்சாதன பெட்டிகள் 3, ஸ்லீப்பர் பெட்டிகள் 8 இருக்கும் என தெற்கு ரயில்வே கூறுகிறது.
இந்த ரயிலில் பயணிக்கும் அனைவரும் ஆதார், வாக்காளர் அட்டை போன்ற அடையாளச் சான்று ஒன்றை வைத்திருக்க வேண்டும். இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதற்கான சான்றிதழையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என தெற்கு ரயில்வே தெரிவிக்கிறது