Delhi-Mumbai Expressway: 246 கிமீ தூர டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை நாளை திறப்பு!
டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட டெல்லி - தௌசா - லால்சோட் சாலையை நாளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
டெல்லி - மும்பை இடையிலான விரைவுச் சாலை திட்டத்தில் 246 கிமீ தொலைவிற்கு டெல்லி - தௌசா - லால்சோட் பகுதி ரூ.12,150 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை பயணம் டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கான பயண நேரத்தை 5 மணி நேரத்திலிருந்து சுமார் 3.5 மணிநேரமாகக் குறைக்கிறது. இதன் மூலம் இந்த முழுப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ் சாலை 1,386 கிமீ நீளம் கொண்ட இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் சாலையாகும். இது டெல்லி மற்றும் மும்பை இடையேயான பயண தூரத்தை 1,424 கிமீ முதல் 1,242 கிமீ வரை அதாவது 12% குறைக்கும். இத்துடன் பயண நேரமானது 24 மணி நேரத்தில், இருந்து 12 மணி நேரமாக அதாவது 50% குறைக்கப்படும்
டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்களை கடந்து கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா மற்றும் சூரத் போன்ற முக்கிய நகரங்களை இந்த எக்ஸ்பிரஸ் சாலை இணைக்கிறது.
இந்த எக்ஸ்பிரஸ் சாலையானது 93 பிரதமர் கதி சக்தி (தேசிய மாஸ்டர் பிளான்) பொருளாதார முனைகள், 13 துறைமுகங்கள், 8 முக்கிய விமான நிலையங்கள் மற்றும் 8 மல்டி மாடல் தளவாட பூங்காக்கள் மற்றும் புதியதாக வரவிருக்கும் கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்களான ஜெவார் விமான நிலையம், நவி மும்பை விமான நிலையம் ஆகியவறை இணைப்பதாக அமையும்.
இதன் மூலம் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சாலையின் ஒரு பகுதியை நாளை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.
பயணிகளின் தேவைகளை மனதில் கொண்டு, ஏடிஎம்கள், ஹோட்டல்கள், சில்லறை விற்பனை கடைகள், ஹோட்டல்கள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்கள் போன்ற வசதிகளுடன் 93 இடங்களில் இந்த எக்ஸ்பிரஸ் சாலை வழியோர வசதிகளைக் கொண்டிருக்கும்.
உள்ளூர் கைவினைப்பொருட்கள், கைத்தறி, பழங்கள் மற்றும் காய்கறிகளை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கிராம தொப்புகளும் கட்டப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் வகையில் ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கும் ஹெலிபேடுகள் அமைக்கபட்டு வருகிறது.
இந்த எக்ஸ்பிரஸ் சாலையின் ஒரு பகுதி மின் வசதி கொண்ட நெடுஞ்சாலையாக உருவாக்கப்படுகிறது, இந்த சாலையில் செல்லும் லாரிகள் மற்றும் பேருந்துகள் ரீசார்ஜ் செய்ய முடியும். டிரக்குகள் மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.
கனரக வாகனங்கள் டீசலுக்கு பதிலாக மின்சாரத்தில் இயங்குவதால் தளவாட செலவை 70 சதவீதம் குறைக்க முடியும். இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2024 மார்ச்சுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.