- Home
- இந்தியா
- விமானத்தில் கரப்பான் பூச்சிகள் அட்டகாசம்! நடுவானில் அலறிய பெண்கள்! மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
விமானத்தில் கரப்பான் பூச்சிகள் அட்டகாசம்! நடுவானில் அலறிய பெண்கள்! மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சிகள் இருந்தது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Cockroaches Found In Air India Flight
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இரண்டு பெண்கள் தங்கள் இருக்கையில் சில கரப்பான் பூச்சிகள் இருப்பதை பார்த்தனர். இதனால் பீதியடைந்து அலறிய அவர்கள் இது குறித்து விமான ஊழியர்களிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த இரண்டு பெண்களும் வேறு இருக்கைக்கு மாற்றப்பட்டனர்.
விமானத்தில் நுழைந்த கரப்பான் பூச்சி
இதன்பிறகு கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்புவதற்காக அந்த விமானம் தரையிறங்கியபோது முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகே விமானத்தில் இருந்த பெண்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ''சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்கு செல்லும் AI180 விமானத்தில் துரதிர்ஷ்டவசமாக இரண்டு பயணிகள் சில சிறிய கரப்பான் பூச்சிகளால் தொந்தரவு செய்யப்பட்டனர். எனவே எங்கள் கேபின் குழுவினர் இரண்டு பயணிகளையும் அதே கேபினில் உள்ள மற்ற இருக்கைகளுக்கு மாற்றினர்.
ஏர் இந்தியா விளக்கம்
பின்பு கொல்கத்தாவில் விமானத்தின் திட்டமிடப்பட்ட எரிபொருள் நிறுத்தத்தின் போது ஊழியர்கள் விமானத்தை முழுமையாக சுத்தம் செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்பாராதவை. வழக்கமான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சில சமயங்களில் பூச்சிகள் விமானத்திற்குள் நுழைந்து விடுகின்றன.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ஏர் இந்தியா தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.
பயணிகள் பாதுகாப்பில் கவனக்குறைவு
சில மாதங்களுக்கு முன்பு அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டடம் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்பட 260 பேர் உயிரிழந்தனர்.
இந்தியா மட்டுமின்றி உலகையே உலுக்கிய இந்த விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமானங்கள் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறை சந்தித்து வருகின்றன. இப்போது கரப்பான் பூச்சிகள் நுழையும் அளவுக்கு விமானத்தை சுத்தம் செய்யாமல் விட்டுள்ளது ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கவனக்குறைவயே காட்டுகிறது.