தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மருத்துவமனையில் அனுமதி
இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் காய்ச்சல் காரணமாக டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நன்கு குணமடைந்து வருவதாகவும், விரைவில் பணியைத் தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது.
மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்த தகவல்படி, தலைமை நீதிபதி கவாய் மருத்துவ சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைத்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
குணமடைந்து வருகிறார்
"தலைமை நீதிபதி நன்றாக குணமடைந்து வருகிறார். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனது பணிகளை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று பி.டி.ஐ மேற்கோள் காட்டிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
அஞ்சல் அட்டை வெளியீடு
இதற்கு முன்னர், தலைமை நீதிபதி கவாய் ஜூலை 12 அன்று ஹைதராபாத்தில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தில் (Nalsar University of Law) பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். அதே நாளில், "பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் – அரசியல் நிர்ணய சபை – இந்திய அரசியலமைப்பு" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு அஞ்சல் அட்டையையும், "இந்திய அரசியலமைப்பில் கலை மற்றும் கையெழுத்து" என்ற தலைப்பில் பட அஞ்சல் அட்டைகளின் தொகுப்பையும் அவர் வெளியிட்டார்.
பகுதி வேலை நாட்கள் முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி கவாய் திங்களன்று நீதிமன்றத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.