காஷ்மீரில் 25 புத்தகங்களுக்கு தடை! வைத்திருந்தால் உடனே பறிமுதல் செய்ய உத்தரவு!
ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் 25 புத்தகங்களுக்கு தடை விதித்துள்ளது. பிரிவினைவாதம் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அருந்ததி ராய், ஏ.ஜி. நூரானி உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் இதில் அடங்கும்.

ஜம்மு காஷ்மீரில் 25 புத்தகங்களுக்குத் தடை
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், பிரிவினைவாதத்தையும், "தவறான தகவல்களையும்" பரப்புவதாகக் கூறி, 25 புத்தகங்களுக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில், புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் அரசியலமைப்பு நிபுணர் ஏ.ஜி. நூரானி ஆகியோரின் புத்தகங்களும் அடங்கும். இந்த புத்தகங்களின் அனைத்துப் பிரதிகளையும் பறிமுதல் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவில், "வரலாற்று அல்லது அரசியல் விமர்சனங்கள் என்ற போர்வையில், தவறான தகவல்களையும் பிரிவினைவாத இலக்கியங்களையும் திட்டமிட்டுப் பரப்பி வருவதாக" விசாரணை மற்றும் நம்பகமான உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட புத்தகங்கள், "பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாகவும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும்" அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Only an insecure government bans books that counter its narrative. AG Noorani, Anuradha Bhasin, Maroof Raza, David Devdas, and many others on this list are known for their factual integrity and command of events in Jammu Kashmir. https://t.co/88hcwPQNtc
— Suhasini Haidar (@suhasinih) August 6, 2025
முக்கிய புத்தகங்கள்
அருந்ததி ராய்: புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் "ஆசாதி" (Azadi) என்ற புத்தகம் தடை செய்யப்பட்டுள்ளது.
விக்டோரியா ஸ்கோஃபீல்ட்: பிரிட்டிஷ் எழுத்தாளர் விக்டோரியா ஸ்கோஃபீல்டின் "காஷ்மீர் இன் கான்ஃப்ளிக்ட் - இந்தியா, பாகிஸ்தான் அண்ட் தி அன்எண்டிங் வார்" (Kashmir in Conflict - India, Pakistan and the unending War).
சுமந்திரா போஸ்: லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியரான சுமந்திரா போஸின் "கான்டெஸ்டெட் லேண்ட்ஸ்" (Contested Lands) மற்றும் "காஷ்மீர் அட் தி க்ராஸ்ரோட்ஸ்" (Kashmir At The Crossroads).
தடைசெய்யப்பட்ட நூல்கள்
ஏ.ஜி. நூரானி: இந்தியாவின் முன்னணி அரசியலமைப்பு நிபுணரான ஏ.ஜி. நூரானியின் "தி காஷ்மீர் டிஸ்ப்யூட் 1947-2012" (The Kashmir Dispute 1947-2012) என்ற புத்தகம்.
அனுராதா பாசின்: காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் அனுராதா பாசினின் "தி டிஸ்மேன்டில்ட் ஸ்டேட், தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் காஷ்மீர் ஆஃப்டர் 370" (The Dismantled State, The Untold Story of Kashmir After 370).
சட்டரீதியான நடவடிக்கை
இந்த 25 புத்தகங்களும் "பாரதிய நாரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023" சட்டத்தின் பிரிவு 98-ன் கீழ் பறிமுதல் செய்யப்படுவதாக அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புத்தகங்கள் "பாரதிய நியாய சன்ஹிதா 2023" சட்டத்தின் 152, 196, மற்றும் 197 பிரிவுகளின் கீழ் குற்றங்களுக்கு வழிவகுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, ஜம்மு காஷ்மீரில் அமைதியைப் பேணுவதற்காக எடுக்கப்பட்டதாக அரசு கூறினாலும், விமர்சகர்கள் இதை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.