யார் இந்த வரிந்தர் சிங் குமான்? 53 வயதில் நடிகர் மரணமடைந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்
புகழ்பெற்ற சைவ பாடிபில்டரும், மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றவருமான வரீந்தர் சிங் குமான் திடீர் மாரடைப்பால் காலமானார். சல்மான் கானுடன் படங்களில் நடித்த இவரது அகால மரணம் ரசிகர்களையும், பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் வரீந்தர் சிங் குமான். இவர் புகழ்பெற்ற பாடிபில்டர். சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவர் 2009ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றார் மற்றும் மிஸ்டர் ஆசியா போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அர்னால்ட் பாடிபில்டிங் போட்டிக்காக ஸ்பெயின் சென்று ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சந்தித்தார். அப்போது அர்னால்ட் அவரது உடலை பார்த்து வியந்து பாராட்டி பேசினார்.
இதனையடுத்து 2012ம் ஆண்டு கபடி ஒன்ஸ் மோர்' மூலம் பஞ்சாபி திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும், ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ் (2014), மர்ஜாவான் (2019), மற்றும் டைகர் 3 (2023) போன்ற பல படங்களில் சல்மான் கானுடன் இணைந்து நடித்தார். உடற்பயிற்சி செய்பவர்கள் பெரும்பாலும் அசைவ உணவே சாப்பிடுவார்கள். ஆனால் வரீந்தர் சிங் சைவ உணவை சாப்பிட்டே உடற்பயிற்சிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவரது கையில் (பைசெப்) சிறு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அறுவை சிசிச்சை செய்து கொள்ள அமிர்தசரஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது அகால மரணச் செய்தியை பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா இரங்கல் தெரிவித்துள்ளார். குமானின் மறைவு பஞ்சாபிற்கு ஒரு பெரிய இழப்பு . மேலும், அந்தப் புகழ்பெற்ற பாடிபில்டர் தனது அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் திறமையால் மாநிலத்திற்கு பெரும் பெருமை சேர்த்ததாகக் கூறினார். குமானின் ஆன்மா சாந்தியடையவும், இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு மனவலிமை கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பர்ஜத் சிங்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.