பீகார் தேர்தல் எக்ஸிட் போல்! என்.டி.ஏ. பெரும்பான்மை.. அதிர வைக்கும் கருத்துக்கணிப்பு!
பீகார் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை என்.டி.ஏ. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இருப்பினும், நவம்பர் 14-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே இறுதி முடிவுகள் தெரியவரும்.

பீகார் தேர்தல் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு
பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
போல்ஸ்டர் பீப்பிள்ஸ் பல்ஸ்:
போல்ஸ்டர் பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்டுள்ள முடிவில், என்.டி.ஏ. கூட்டணி 133 முதல் 159 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 75 முதல் 101 இடங்களையும், ஜன சுராஜ் 0 முதல் 5 இடங்களையும், மற்ற கட்சிகள் 2 முதல் 8 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பீப்பிள்ஸ் இன்சைட்:
பீப்பிள்ஸ் இன்சைட் வெளியிட்டுள்ள முடிவில், என்.டி.ஏ. கூட்டணி 133 முதல் 148 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 87 முதல் 102 இடங்களையும், ஜன சுராஜ் 0 முதல் 2 இடங்களையும், மற்ற கட்சிகள் 3 முதல் 6 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேட்ரிஸ்:
மேட்ரிஸ் வெளியிட்டுள்ள முடிவில், என்.டி.ஏ. கூட்டணி 147 முதல் 167 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 70 முதல் 90 இடங்களையும், ஜன சுராஜ் 0 முதல் 5 இடங்களையும், மற்ற கட்சிகள் 2 முதல் 8 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்புகள் என்.டி.ஏ. கூட்டணிக்குச் சாதகமாக முடிவுகளைக் காட்டினாலும், வரும் 14-ஆம் தேதி வெளிவரும் முடிவே இறுதியானது.
பீகாரில் இரண்டு கட்ட தேர்தல்
முதற்கட்டத் தேர்தல் கடந்த 6-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் போன்ற பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிலவரம் இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்றது. இதில், இன்று மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. டோக்கன் பெற்ற வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்குகள் உட்பட இறுதி வாக்குப்பதிவு நிலவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
நவ. 14-ல் வாக்கு எண்ணிக்கை
இரண்டு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் வரும் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மை பெறும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சியமைக்கும்.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பின்படி, நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த முடிவானது.