பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு AI மூலம் தீர்வு: EaseMyTrip நிறுவனரின் சூப்பர் ஐடியா!
ஈஸ் மை ட்ரிப் இணை நிறுவனர் பிரஷாந்த் பிட்டி, பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க AI மற்றும் செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தி ரூ.1 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். கூகிள் மேப்ஸ் மற்றும் AI மூலம் தீர்வு காணத் திட்டமிட்டுள்ளார்.

பிரஷாந்த் பிட்டியின் அறிவிப்பு
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பெங்களூருவின் போக்குவரத்து அமைப்புகளை நவீனப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், நகரம் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலைச் சந்திக்கிறது. மோசமான உள்கட்டமைப்பும் வடிவமைப்பும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈஸ் மை ட்ரிப் (EaseMyTrip) இணை நிறுவனர் பிரஷாந்த் பிட்டி, AI-உதவியுடன் போக்குவரத்து பகுப்பாய்வு மற்றும் செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
100 நிமிடங்கள் போக்குவரத்தில் சிக்கியதால் ஏற்பட்ட முடிவு!
பெங்களூருவின் அவுட்டர் ரிங் ரோடு (ORR) அருகே ஒருநாள் நள்ளிரவு பயணம் செய்யதபோது 100 நிமிடங்களுக்கும் மேலாக டிராபிக்கில் சிக்கித் தவித்துள்ளார் பிரஷாந்த் பிட்டி. 11 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க அவருக்கு 2.15 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. போக்குவரத்து சிக்னல்களோ அல்லது போலீசாரோ அங்கு இல்லை.
"ஏன் இங்கு சிக்னல் அல்லது போலீஸ் இல்லை என்று யோசித்து 100 நிமிடங்கள் சிக்கித் தவித்தேன்" என்று அவர் கூறினார். ஆனால் ,அவர் பெங்களூரு போக்குவரத்து குறித்து புலம்பாமல், தீர்வைப் பற்றி யோசித்துள்ளார். "நான் புகார் செய்ய விரும்பவில்லை – அதை சரிசெய்ய விரும்புகிறேன்" என்று பிட்டி கூறுகிறார்.
AI அடிப்படையிலான போக்குவரத்து மேலாண்மைத் திட்டம்
நெரிசல் நிறைந்த பகுதிகளை அடையாளம் கண்டு தீர்க்க, கூகிள் மேப்ஸின் சாலை மேலாண்மை நுண்ணறிவு கருவி (Road Management Insight Tool), செயற்கைக்கோள் படங்கள் மற்றும் AI பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தப் போவதாக பிட்டி கூறியுள்ளார். தரவு அடிப்படையிலான போக்குவரத்து மாதிரியை உருவாக்கி, நெரிசல் நிறைந்த பகுதிகளில் ஸ்மார்ட் சிக்னல்களை அமைக்க உதவுவதே அவரது இலக்கு.
"கூகிள் மேப்ஸ் மற்றும் AI வழியாக பெங்களூருவில் உள்ள நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கண்டறிய ரூ.1 கோடியை ஒதுக்குகிறேன்" என்று அவர் அறிவித்துள்ளார்.
AI என்ஜினியர்களை நியமிப்பதற்கும், தரவுகளைப் பெறுவதற்காக BBMP போன்ற அரசுப் போக்குவரத்து அமைப்புகளுடன் சேர்த்து செய்ல்படுவதற்கும் திட்டமிட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் விரிவாக்கக்கூடிய சாத்தியங்களுடன் ஒரு முன்னோடித் திட்டத்தை வழங்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.
பெங்களூரு அரசின் ஒத்துழைப்பு தேவை
பெங்களூருவின் போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இந்த முயற்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார் பிரஷாந்த் பிட்டி. ஆனால், இதற்கு பெங்களூரு பெருநகரப் பேரவை (BBMP) மற்றும் பெங்களூரு போக்குவரத்துப் காவல்துறை (BTP) ஆகியவை ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். குறிப்பாக, இந்த அமைப்புகள் தங்கள் தரவுகளை வழங்க வேண்டும் அல்லது API அணுகலை வழங்க வேண்டும் என்றும் பிட்டி வலியுறுத்தியுள்ளார். உருவாக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் செயல்பட ஒரு குழுவையும் நியமிக்க வேண்டும் என அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
"அவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பினால் மட்டுமே இது சாத்தியம். அப்படிச் செய்தால், நான் உடனடியாகத் தொடங்கத் தயாராக இருக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
சிக்கலைத் தீர்க்கும் தொழில்நுட்பம்
"பெங்களூரு எதிர்கால தொழில்நுட்ப நகரம். அதன் மக்கள் சிறந்த போக்குவரத்து நிர்வாகத்தைப் பெறத் தகுதியானவர்கள். அலட்சியம், ஊழியர் பற்றாக்குறை மற்றும் சாலை வடிவமைப்பு குறைபாடுகள் இந்த பிரச்சினைக்கு காரணமாக உள்ளன. தொழில்நுட்பம் இந்த சிக்கல்களைச் சமாளிக்க உதவும்" என்று அவர் கருதுகிறார்.
அவுட்டர் ரிங் ரோடு, சில்க் போர்டு, ஒயிட்ஃபீல்ட் மற்றும் ஹெப்பால் போன்ற பெங்களூருவின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நிலைமைகள் மோசமடைந்து வரும் நிலையில், பிட்டியின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. அரசும் தனியாரும் இணைந்து ஒரு முன்மாதிரியாகச் செயல்படலாம். இந்தத் திட்டத்தின் வெற்றி, இந்தியாவின் பிற நகரங்களிலும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உதவும்.