ஆந்திராவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை; ஏன்? சேதம் என்ன?
ஆந்திராவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் ஆறுகள், ஓடைகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. கிராமங்கள், நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அப்படி என்னதான் நடந்தது?
Rain in Andhra
தெலுங்கு மாநிலங்களில் மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் மழை, வெள்ளத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நகரங்கள், கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக விஜயவாடா வெள்ளத்தில் சிக்கியுள்ளது.
Andhra train services affected
கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக விஜயவாடா வழியாக செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வேறு சில ரயில்களை ரயில்வே அதிகாரிகள் மாற்றுப்பாதையில் இயக்கி வருகின்றனர். என்டிஆர் மாவட்டம் கொண்டபள்ளி, ராயணபாடு பகுதிகளில் ரயில் பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ரயில்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
விஜயவாடாவில் சந்திரபாபு
ஆந்திராவில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா, தலைமைச் செயலாளர் நீரப் குமார் பிரசாத் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் விஜயவாடாவில் உள்ள பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். புயல், மழைப்பொழிவு குறித்த விவரங்களை தலைமைச் செயலாளர் முதல்வருக்கு எடுத்துரைத்தார்.
எந்தெந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து முதல்வர் கேட்டறிந்தார். பிரகாசம் பேரேஜ் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். வெள்ளப்பெருக்கு குறித்த விவரங்களை கேட்டறிந்த பின்னர், இந்த மழையை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என சந்திரபாபு அறிவுறுத்தினார். உயிர் சேதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
புயல் கரையை கடந்த இடங்களை விட, மற்ற இடங்களில் அதிக மழை பெய்துள்ளதாகவும், அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிவதாகவும், எனவே ஆறுகள், குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வழிகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இயல்பு நிலை திரும்பும் வரை போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Rain in Andhra
மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. என்டிஆர் மாவட்டம் வட்சவை பகுதியில் 32.3 செ.மீ., ஜக்கையாபேட்டில் 20.27 செ.மீ., திருவூரில் 26.0 செ.மீ., குண்டூரில் 26.0 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாநிலத்தில் 14 மண்டலங்களில் 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.
மற்றொருபுறம் 62 இடங்களில் 112 மி.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. 14 மாவட்டங்களில் 7 முதல் 12 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது.
ஒரே இடத்தில் நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர். மற்றொரு இடத்தில் 3 பேர், இவர்களில் 2 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர், மற்றொரு இடத்தில் மங்களகிரியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. மொத்தம் 9 பேர், ஒருவர் காணவில்லை என்பது வேதனையளிக்கிறது. உயிர் சேதத்தை ஓரளவுக்கு தடுத்துள்ளோம். இந்த 9 பேரும் உயிருடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என சந்திரபாபு வேதனை தெரிவித்தார்.
Dams in Andhra
‘அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றன. இந்த சூழ்நிலையில் வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, ஸ்ரீசைலத்தில் இருந்து கீழே தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து நாகர்ஜுன சாகர், அங்கிருந்து புலிச்சின்ட்லா நிரம்பிவிட்டது. இடையில் நல்கொண்டா, கம்மம் மாவட்டங்களில் இருந்து பிற ஆறுகள் வழியாக தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. இதனால் 1 லட்சம் முதல் 2 லட்சம் கன அடி அல்லது 3 லட்சம் கன அடி தண்ணீர் வந்து சேருமா? என்ற நிலைமையை கணிக்க முடியவில்லை.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி வரை பிரகாசம் பேரேஜுக்கு 8,90,000 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. திங்கள்கிழமைக்குள் 10 லட்சம் அல்லது 10.5 லட்சம் கன அடி தண்ணீர் வந்து சேர வாய்ப்புள்ளது. சில இடங்களில் சில சிறு சிறு பிரச்சனைகள் உள்ளன.
Rail track Damage
வெள்ளத்தால் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. 1 லட்சத்து 11 ஆயிரத்து 259 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. தோட்டக்கலை பயிர்கள் 7,360 ஹெக்டேர் பரப்பளவில் சேதமடைந்துள்ளன. அதேபோல், சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. 2, 3 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 107 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 17,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பயிர்கள் சேதமடைந்த பகுதிகளுக்கு 8 இயந்திரப் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இரண்டு ஹெலிகாப்டர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நிவாரணத் தொகையையும் உயர்த்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 25 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சர்க்கரை, வெங்காயம், உருளைக்கிழங்கு, எண்ணெய் வழங்கப்படும் எனவும் முதல்வர் சந்திரபாபு தெரிவித்தார். நெசவாளர்களுக்கு ஒன்றிரண்டு மாதங்கள் வேலை இருக்காது என்பதால் அவர்களுக்கும், மீனவர்களுக்கும் கூடுதலாக 25 கிலோ அரிசி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Chandra Babu Naidu visits flood affected area
இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 28.5 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். 3 மாவட்டங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமாகவும், 19 மாவட்டங்களில் 20- 50 சதவீதத்திற்கும் அதிகமாகவும், 4 மாவட்டங்களில் சராசரி மழைப்பொழிவும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
‘50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் வந்துள்ளது. மக்களும் பல வெள்ளங்களை பார்த்துவிட்டோம் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால், ஒரே இடத்தில் இவ்வளவு அதிக மழை பெய்தது இதுவே முதல் முறை. குண்டூர், விஜயவாடாவில் 37 செ.மீ. மழை பதிவானது அசாதாரணமானது. இதுதான் மேக வெடிப்பு. தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் 50 ஆண்டுகளுக்கான தரவுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இப்போது அவை நிரம்பி வழிகின்றன. இதனால், அவை நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் கட்டிய ரயில்வே பாலங்களை பார்த்தால், அவர்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் நிற்கும் வகையில், அதற்கும் மேல் 25- 50 சதவீதம் கூடுதல் திறனுடன் கட்டியுள்ளனர். அனைத்தையும் பார்க்கும்போது ஆங்கிலேயர்கள் கட்டிய பாலங்கள் எங்கும் உடைந்து விழவில்லை என்பதால், அவர்கள் எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் கட்டியுள்ளனர் என்பது புரிகிறது.
‘செவ்வாய்க்கிழமைக்குள் மழை குறைந்துவிடும் என பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவித்துள்ளோம். சனிக்கிழமை மதியம் முதல் மழை நின்றது.. ஆனால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால்தான் திங்கள்கிழமை வரை விடுமுறை அறிவித்துள்ளோம். இந்த விவகாரம் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்வோம்’ என சந்திரபாபு தெரிவித்தார்.
‘துங்கபத்ரா விவகாரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கன்னையா நாயுடுவை அனுப்பி, தண்ணீர் வந்தவுடனேயே மதகுகளை மூடச் சொல்லி உத்தரவிட்டோம். அதுதான் எங்கள் நேர்மை. இதனால் துங்கபத்ராவுக்கு 95 -96 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் 100 சதவீதம் நிரம்பிவிடும். அந்த திட்டத்திற்கும் நாங்கள் அடிக்கல் நாட்டியுள்ளோம்’ என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.