மின்னல் வேகம்; சென்னை டூ திருச்சி வெறும் 1 மணி நேரம்; ஹைப்பர்லூப் ரயில் டிராக் ரெடி!
இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் சோதனைத் தடம் சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.
Hyperloop Train Track
இந்தியாவின் போக்குவரத்துக்கு முதுகெலும்பாக ரயில்கள் உள்ளன. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அதற்கேற்ப கடந்த பத்தாண்டுகளில் இந்திய ரயில்வே பல்வேறு மாற்றங்களை அதிரடியாக செய்து வருகிறது.
அதன்படி நாட்டில் தொடர்ந்து அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மேக் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் ரய்ல்வேக்கு மட்டுமின்றி நாட்டின் ஒரு அடையாள முகமாகவே மாறியுள்ளது. தற்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் ஓடும் நிலையில், விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலும் விரைவில் இயக்கப்பட உள்ளது.
Hyperloop Train speed
மறுபுறம், ஹைட்ரஜன் ரயிலும் இந்தியாவில் இயங்க தயாராகி வருகிறது. இந்நிலையில், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் போக்குவரத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார். அதாவது சென்னை ஐஐடி மாணவர்கள் ஹைப்பர்லூப் ரயில் சோதனை டிராக்கை உருவாக்குகிறார்கள் என்பதுதான் அது.
மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் ரயில் திட்டத்தை இந்தியாவில் கொண்டு செயல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்காக தீவிர சோதனை நடந்து வரும் நிலையில், சென்னை ஐஐடி மாணவர்கள் 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் டெஸ்ட் டிராக்கை வடிவமைத்துள்ளனர் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
Hyperloop Train in india
இது தொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அஸ்வினி வைஷ்ணவ், ''இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனைத் தடம் (410 மீட்டர்) நிறைவடைந்தது. ரயில்வே துறை மற்றும் சென்னை ஐஐடி குழுவினர் இணைந்து இந்தப் பாதையை உருவாக்கியுள்ளனர். சென்னை ஐஐடி குழு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனமான TuTr ஹைப்பர்லூப் ஆகியவை இணைந்து நாட்டின் அதிவேக ரயிலை உருவாக்குகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.
ஹைப்பர்லூப் ரயில் என்பது நாம் நினைத்து பார்க்கக்கூட முடியாத அளவுக்கு மிக வேகமாக செல்லக்கூடியதாகும். ஹைப்பர்லூப் ரயில் மணிக்கு 1,100 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது என்பதால் இதன் வேகத்தை கற்பனை செய்து பாருங்கள். இந்தியாவில் இந்த ரயிலை மணிக்கு 360 கிமீ அல்லது வினாடிக்கு 100 மீட்டர் வேகத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Vande bharat train
இந்த வேகத்தின்படி பார்த்தால் இந்த ரயில் சென்னை திருச்சி இடையிலான தொலைவை வெறும் 1 மணி நேரத்தில் கடந்து விடும். இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் மும்பை மற்றும் புனே இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இயக்கப்பட்டால் மும்பை-புனே இடையேயான பயண நேரம் வெறும் 25 நிமிடங்களாக குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் சோதனைத் தடம் சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.