இன்று முதல் அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் கட்டணம் ரூ5.50 ஆக குறைப்பு!
தமிழ்நாடு முழுவதும் அடுக்கு மாடி குடியிருப்பில் பொது பயன்பாட்டிற்கான மின்சார கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்காக புதிய தாழ்வழுத்த வீதப்பட்டி IDயை மின் கட்டண ஆணை எண் 7 நாள் 09.09.2022ல் உருவாக்கியது.
தமிழக முதலமைச்சர் 18ம் அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது, எனவும் இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்றும் பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளை பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய் 15 பைசாவிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து தமிழக அரசின் கொள்கை வழிக்காட்டுதலின் படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகை IE-ஐ அறிமுகப்படுத்தியும் இக்குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் ரூ.5.50/யூனிட் என நிர்ணயித்தும் உள்ளன. இந்த கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.