Palani Murugan Temple: பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை.. எப்போதில் இருந்து தெரியுமா?
பழநி முருகன் கோயிலுக்குள் செல்போன், கேமராக்களுக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் பக்தர்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் வெளியூரில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் செல்போன், கேமரா உள்ளிட்டவைகள் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் கருவறையில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மலைக்கோவிலுக்கு செல்போனை எடுத்து செல்ல தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பழனி கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதித்ததுடன், கருவறைக்குள் போட்டோ எடுக்க அனுமதித்ததற்கு கண்டனமும் தெரிவித்தனர்.
பழனி மலைக் கோவிலுக்கு செல்போன் எடுத்து செல்ல தடையை உடனடியாக அமல்படுத்தவும். மேலும் திருப்பதி கோவிலை போல் ஏன் தமிழகத்திலும் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடையை அமல்படுத்தக் கூடாது என கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக செப்டம்பர் 1ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து பழனி மலைக்கோவில் அடிவாரம், மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையங்களில் செல்போன்கள், கேமிராக்கள் டோக்கன் மூலம் பாதுகாக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீரவிமாக மேற்கொண்டு வந்தது.
நீதிமன்ற விதித்த உத்தரவின் படி இந்து அறநிலையத்துறை சார்பில் செப்டம்பர் 1ம் தேதியான நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், பழநி முருகன் கோயிலுக்குள் செல்போன், கேமராக்களுக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் செல்போன்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என விளம்பரப்படுத்தப்படுகிறது. மேலும், 3 இடங்களில் செல்போன் சேகரிப்பு மையங்கள் அமைத்து ரூ.5 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதனையடுத்து செல்போன் சேகரிப்பு நடைமுறையை அனைத்து கோயில்களிலும் பின்பற்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.