- Home
- Gallery
- Mettur Dam : 100 அடியை எட்டுமா மேட்டூர் அணை.? நிரம்பியது கர்நாடகா அணை.!50ஆயிரம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு
Mettur Dam : 100 அடியை எட்டுமா மேட்டூர் அணை.? நிரம்பியது கர்நாடகா அணை.!50ஆயிரம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு
கர்நாடகாவில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் சுமார் 35ஆயிரம் முதல் 50ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை இன்னும் ஒரு வாரத்தில் 100 அடியை எட்டும் என விவசாயிகள் ஆவலோடு காத்துள்ளனர்.

கன மழை- நிரம்பும் அணைகள்
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி குடகு, மைசூர், பெங்களூரு ஆகிய மாவட்டங்களை கடந்து தமிழ்நாட்டிற்குள் வருகிறது. தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவில் இருந்து தருமபுரி சேலம் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது.
இந்த மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் டெல்டா பாசன பகுதிகளில் உள்ள 12 மாவட்டங்கள் பயன்பெறும். கடந்த சில மாதங்களாக வறண்டு காணப்பட்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது உயர தொடங்கியுள்ளது.
நிரம்பியது கேஎஸ்ஆர் அணை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அங்குள்ள கேஎஸ்ஆர் அணையானது தனது 124 அடி கொள்ளளவில் தற்போது 123.76 அடியை எட்டியுள்ளது. தற்போது நீர் வரத்தை பொறுத்தவரை 33ஆயிரம் கன அடியாக உள்ளது. ஆனால் நீர் வெளியேற்றம் 10ஆயிரம் அடி மட்டுமே உள்ளது.
எனவே எந்த நேரத்திலும் முழு கொள்ளளவான 124 அடியை எட்டும் போது அணைக்கு வருகின்ற 35ஆயிரம் முதல் 50ஆயிரம் கன அடி நீர் அப்படியே திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாயக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Cauvery water
நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு
இந்தநிலையில் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவில் தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 52,000 கன அடியில் இருந்து 42,000 கன அடியாக சரிந்துள்ளது. இதே அளவு தண்ணீர் ஒக்கேனக்கல் பகுதிக்கும் வருவதால் பரிசல் மற்றும் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கர்நாடகவில் உள்ள கேஎஸ்ஆர் அணையில் முழு கொள்ளளவை எட்டியதும் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் நாளை அல்லது நாளை மறுதினம் மீண்டும் தமிழகத்திற்கு நீர் வரத்து 70ஆயிரம் கன அடியை எட்டும் என கூறப்படுகிறது.
100 அடியை எட்ட காத்திருக்கும் மேட்டூர் அணை
கர்நாடகாவில் நீர் திறப்பு அதிகரித்துள்ள காரணத்தால் தமிழக விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள மேட்டூர் அணையும் கிடு,கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 6 அடி முதல் 7 அடி வரை மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்தது. நேற்று 82அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 85அடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
வரும் நாட்களில் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் மேட்டூர் அணை 100 அடியை இன்னும் ஒரு வாரத்தில் எட்டும் என தகவல் வெளியாகியுள்ளது. இது டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.